ஆதியாகமம் 13.9 இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான் ஆபிரகாம் பிரச்சனைகள் ஏதுமின்றி ஏதோ ஓர் இடத்தில் சுகமாய், சமாதானமாய் வாழ்ந்தால் போதும் என நினைத்தார். லோத்துவிடம் நீ வலது புறம் நான் இடது புறம் போகிறேன் அதாவது நீ வடக்கு திசைக்கு போனால் நான் தெற்கு போகிறேன் என்றே கூறுகின்றார். லோத்து பிரிந்த பிற்பாடு ஆண்டவர் ஆபிரகாமிடம் சொல்கின்றார். வசனம் 14ல் லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,… ஏதோ ஓர் திசையில் சச்சரவு இன்றி வாழ்ந்தால் சரி என்பதே ஆபிரகாமின் எண்ணம். ஆனால் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு எல்லாமே ஆபிரகாமிற்கும் அவன் சந்ததிக்கும் என்பது தேவ திட்டம். தன்னைக் குறித்து தான் எண்ணியதை விட தேவன் அவரை குறித்து மேன்மையாகவே எண்ணினார். இதனால் தான் ஆண்டவர் ஏசாயாவில் என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று சொல்லுகிறார்.பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது என கூறுகின்றார். உங்களை குறித்து உங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னதமான திட்டத்தை கொண்டுள்ளார். ஆசீர்வாதமாக நடத்துவாராக!!!

