சகோதரர் கூடி வருவதால் ஏற்படும் நன்மை
சங்கீதம் 133 சகோதரர்கள் கூடி வருவதால் ஏற்படும் மூன்று ஆசீர்வாதங்களை காண்பிக்கிறது.
🛑 நன்மையும் இன்பமும்
சங்கீதம் 133:1-3 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது
தேவ பிள்ளைகள் ஒருமித்து வாசம் பண்ணுவதால் நன்மைகள் உண்டாகின்றன. உலகில் நன்மை தரக்கூடிய எத்தனையோ காரியங்கள் இருந்தாலும் அதிக நன்மையை தருவது சகோதரர்கள் ஒன்றாக கூடுவது தான். உலகம் தரக்கூடிய நன்மைகள் அது வித்தியாசமானது, நிலையில்லாதது, அழிந்து போக கூடியது. ஆனால் இங்கு சொல்லப்படுகிற நன்மை அது மேலானது, உன்னதமானது, நிலையானது.
இன்பம் என்கிற சொல்லும் அது மகிழ்ச்சி, சந்தோஷம், ஆனந்தம் என்கிற பதங்களிலும் உயர்வானது. உலகிலும் அதிகளவு இன்பம் அளிக்க கூடிய காரியங்கள் திரளாக உள்ளது. கடற்கரை வடிவமைப்புகள், இசை நிகழ்ச்சிகள், உயர்தர உணவு வகைகள், களியாட்ட நிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் என வகை வகையான இன்பமூட்டும் செயல்கள் பல உள்ளன. ஆனால் மக்கள் நிஜமான இன்பத்தை அதில் அனுபவிக்கின்றார்களா?
இப்போது ஓர் கேள்வி? மக்கள் சம வேளையில் நன்மையையும் இன்பத்தையும் எதிலாவது அனுபவிக்கின்றார்களா? ஒருவேளை ஏதோ ஓர் சில காரியங்கள் இருக்கலாம் . ஆனால் உண்மையில் அவை நிலையானதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இங்கு தேவ பிள்ளைகள் ஒருமித்து வாசம் பண்ணுவது இவை இரண்டையும் எமக்கு வழங்குகிறது.
தாவீது ஓர் இராஜாவாக தனது வாழ்வினை பல விடயங்களில் நன்மையும் இன்பமும் காண கூடியவாறு அமைக்க முடியும். ஆனால் அவை யாவற்றையும் விட சகோதரர்கள் கூடி வருவதே அவருக்கு நன்மையையும் இன்பத்தையும் அளித்தது.
🛑 அபிஷேகமும் விஷேசித்த வரங்களும்
சங்கீதம் 133:2 – அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும்,
தலையில் ஊற்றப்படும் தைலம் வஸ்திரங்கள் மீது இறங்கும் போது அது ஆரோனிலும் ஆரோன் செல்லும் இடமெங்கும் வாசனை வீசுகிறதாக அமையும். சாதாரணமாக மனிதர்களால் உருவாக்கப்படும் தைலமே மிகுந்த வாசனை மிக்கதாக இருக்கும் போது ஆண்டவராகிய தேவனால் காண்பிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தைலம் எத்தனை விலையேற பெற்றது.
சகோதரர்கள் ஒன்றாக கூடி வரும் போது பரிசுத்த ஆவியானவர் நம் மீது இறங்குவதுடன் இன்னும் எம்மை பெலப்படுத்தி அதிகமான வரங்களை இன்னும் நமக்கு தந்தருள்கிறார். அவைகள் நமக்கு அலங்காரத்தையும் நாம் செல்லும் இடமெங்கும் வாசனையையும் ஏற்படுத்துகிறது. தேவ நாமமும் அதிகமாக மகிமைப்படுகிறது
🛑 மாற்றங்களும் கனிகளும்.
சங்கீதம் 133.3 எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.
மலைகள், பர்வதங்கள் என்பன பொதுவாக வெறுமையும் செழிப்பும் உடையவை. கற்களாலும் முட்செடிகளாலும் நிறையப் பெற்றவை. ஆனால் அவை மீது பொழியும் பனி அவற்றை மிகுந்த அழகாகவும் செழிப்பாகவும் மாற்றுகிறது. சகோதரர்கள் ஒன்றாக கூடும் போது அந்த கூடுகையானது அங்குள்ளவர்களை அது அழகாகவும் செழிப்பாகவும் மாற்றுகிறது.
உண்மையில் நமது இருதயமும் கடினமானது. சகல அருவருப்புகளாலும் நிறைந்தது. வேதம் சொல்கிறது அது திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாய் இருக்கிறது. இதனை மாற்றி அழகாக செழிப்பாக இருக்க செய்வது சகோதரர் கூடுகையே. தாவீது இராஜா இந்த இரகசியத்தை சிறப்பாக அறிந்திருந்ததால் இதனை பாடலாக வெளிப்படுத்துகிறார்.
நாமும் இந்த உண்மையை புரிந்து கொண்டு சபை கூடி வருதலை விட்டுவிடாமல் ( எபிரேயர் 10:25 ) ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி சபை கூடி வருதலை மன மகிழ்ச்சியின் நாளாக கருதி ( ஏசாயா 58: 13) அதிகமாய் சேவிப்போம்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!


Amen..