img 20260114 wa0000

உயர்வுக்கு ஆண்டவர் எதிர்பார்க்கும் மூன்று தகுதிகள்// Tamil Bible Message// Tamil Christian Bible study notes // bible sermon

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக. ஆண்டவராகிய தேவன் ஓர் மனிதனை உயர்த்த வேண்டும் என்றால் சில நிபந்தனைகளை வைத்துள்ளார். நம் வாழ்வின் உயர்வுகள் மேன்மைகளுக்கு சில தராதரங்களை நாம் கொண்டிருக்க வேண்டும்.



தாவீதை ஆண்டவர் உயர்த்த விரும்பினர் சிறுவயதிலேயே அவருக்கு அந்த பாக்கியம் கிடைத்தது ஆயினும் அவர் சில தகுதிகளை தன்னுடைய வாழ்விலே கொண்டிருந்தார் இன்றைக்கு நாம் அந்த தகுதிகளை ஆராய்ந்து பார்த்து நம்முடைய வாழ்க்கையிலும் அத்தகைய தகுதியை நாம் கொண்டிருக்கிற போது நிச்சயமாக தேவன் நம்முடைய வாழ்க்கையிலும் உயர்வுகளையும் மேன்மைகளையும் அருளுகிறவராக இருக்கிறார்.



1 சாமுவேல் 16ஆம் அதிகாரத்தில் சாமுவேலை நோக்கி ஆண்டவர் சொல்கிறார். நான் ஈசாயின் புத்திரரில் ஒருவனை ராஜாவாக தெரிந்து கொண்டேன். நீ அங்கு போய் நான் காண்பிப்பவனை அபிஷேகம் பண்ணுவாயாக என்று ஆண்டவர் சொல்லியிருந்தார். இதன் பிரகாரம் சாமுவேல் ஈசாயின் வீட்டுக்குச் செல்லுகின்றார். அவர் அங்கு சென்று ஈசாயின் மூத்த மகனை பார்த்த போது பிரமித்து போனார்.



அவனுடைய சரீர வளர்ச்சியையும் அவனுடைய முகத்தையும் பார்த்தவுடன் சாமுவேல் இவன் தானாக்கும் என்று நினைத்து விட்டான். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம் சொன்னார் மனுஷன் பார்க்கிற வண்ணமாக நான் பார்க்க மாட்டேன் நான் இவனைப் புறக்கணித்து இருக்கிறேன் மனுஷன் முகத்தை பார்க்கிறான் நானோ இருதயத்தை பார்க்கிறேன் என்று கூறினார்.



உண்மையில் அவனை தேவன் தேர்வு செய்யவில்லை. ஆனால் ஈசாயின் கடைசி குமாரனாகிய தாவீதை ஆண்டவர் தெரிவு செய்கிறார் அவன் தேர்வு செய்யப்பட்ட போது, 1 சாமுவேல் 16: 12 இவ்வாறு சொல்லுகிறது அவன் சிவந்த மேனியும் அழகிய கண்களும் நல்ல ரூபமுள்ளவனாய் இருந்தான் என்பதாக.



உண்மையில் இந்த காரியங்களை பார்க்கிற போது இவையும் வெளிப்படையான அதாவது சரீர பிரகாரமான தோற்றமாகவே தான் தெரிகிறது. அதாவது சாமுவேல் எப்படியாக ஈசாயின் மூத்த மகனை அவனின் வெளித்தோற்றத்தின் அடிப்படையில் பார்த்து பிரமித்தானோ அப்படித்தான் இங்கே தாவீதின் வெளித்தோற்றமும் குறிப்பிடப்படுகிறது.



ஆகவே நிச்சயமாக இங்கே ஆண்டவர் தாவீதின் வெளித்தோற்றத்தை குறிப்பிட்டாலும் அதற்கு உள்ளே நிறைய அர்த்தங்கள் இருக்கிறது என்பதை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அந்த மூன்று சுபாவங்களை குறித்து இன்று நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.





1 சாமுவேல் 16:12 பொதுவாகவே இஸ்ரவேலர் சிவந்த மேனியான உடல் அமைப்பையே கொண்டு இருப்பர். அப்படி இருக்கும்போது தாவீதின் இந்த தன்மையை சொல்வதன் அடிப்படையில் ஏதோ ஓர் ரகசியத்தை தேவன் வெளிப்படுத்தவே விரும்புகிறார். சிவந்த மேனியை கொண்டிருக்கும் ஒரு மனிதன் ஆடு மேய்ப்பவனாக இருக்கும்போது நிச்சயமாக வெயில் அவன் மேல் படுவதனால் அவன் கறுத்து போவதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் அதிகமாக இருக்கின்றது.



இதையேதான் உன்னதபாட்டு 1:5 இல் வாசிக்கின்றோம். அங்கு சொல்லப்படுகிறது நான் கறுப்பாய் இருக்கிறேன் என்று பாராதேயுங்கள் வெயில் என் மேல் பட்டது என்னை திராட்சை தோட்டத்திற்கு வேலைக்காரியாக வைத்துவிட்டார்கள் என்பதாக. இங்கே வெயில் பட்டதனால் அந்த சரீரம் கறுத்து போயிருந்தது உண்மையான ஒரு காரியம்.



இங்கே தாவீதின் காரியத்திலே நிச்சயமாக ஆடு மேய்க்கிற இந்த தாவீதும் வெயிலில், குளிரில் இவ்வாறுதான் அவருடைய வாழ்க்கை அமைந்திருக்கும். ஆனால் அவனுடைய மேனி இன்னும் சிவப்பாகவே இருந்தது. அவன் உலகத்தில் பிரவேசித்துக் கொண்டிருந்தான் ஆனால் உலகத்தால் அவனை கரை படுத்த முடியவில்லை அதாவது தன்னுடைய சரீரத்தை தீட்டு படுத்தாமல் வாழ்ந்த ஒரு மனிதனாக நாம் தாவீதை கருத முடியும். தன்னுடைய சரீரத்தை மிகவும் கவனமாக பாதுகாத்து வந்திருந்தான்.



அன்புக்குரியவர்களே!! நம்முடைய மாம்சத்தை நாம் தீட்டுப் படுத்துகிறவர்களாக இருக்கக் கூடாது. புதிய ஏற்பாட்டிலே அதிகமான காரியங்களை அப்போஸ்தலனாகிய பவுல் மற்றும் அப்போஸ்தலனாகிய பேதுரு உள்ளிட்ட தேவனுடைய பல மனிதர்கள் கூறியிருக்கிறார்கள்.



நம்முடைய சரீரம் தேவனுடைய ஆலயமாக இருக்கின்றது இந்த ஆலயத்தை பல்வேறு காரியங்கள் தீட்டுப்படுத்துகிறது விபச்சாரம், களவு, பொய், பொல்லாத சிந்தனைகள், பில்லி சூனியங்கள், களவுகள், பொய்கள், சண்டைகள், பொறாமைகள், வாக்குவாதங்கள், கோபங்கள், எரிச்சல்கள், கசப்புகள் இப்படி பல்வேறு விதமான காரியங்களினால் நம்முடைய சரீரம் தீட்டுப் படலாம்.



நாம் இந்த உலகத்தில் தான் வாழ வேண்டும் ஆனால் இந்த உலகத்தால் நம்மை கறை படுத்தாத படி நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சிவந்த மேனியை தீட்டு படுத்த பல்வேறு காரியங்கள் இந்த உலகில் உண்டு உலகத்தாலும், மாம்சத்தின் இச்சைகளினாலும் நாம் இழுபட்டு நம்முடைய சரீரத்தை நாம் கறைபடுத்தாத படி பாதுகாப்பது நமக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.



ஆண்டவர் சொன்னது போலவே தாவீதின் இருதயம் மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது. தாவீது தன்னுடைய வாழ்வை மிகவும் சிறப்பாக பாதுகாத்து வைத்திருந்தார். தாவீது கர்த்தரோடு நடந்த மனிதன்; கர்த்தருடைய வழிகளில் நடக்க உற்சாகமாய் இருந்த மனிதன்; கர்த்தருடைய கற்பனைகள் கட்டளைகள் பிரமாணங்கள் வாக்குத்தத்தங்கள் வார்த்தைகளை தியானித்து அவைகளின் படி வாழ பிரயாசப்பட்ட ஒரு மனிதன் என்பதை நாம் சங்கீதங்களை படிக்கிற போது நாம் கண்டு கொள்ளலாம்.



நம்முடைய சரீரத்தை நாம் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் நம்முடைய இருதயத்தை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நாம் கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்து தியானித்து அவைகளின் மேல் வாஞ்சையும் தவனமுமாய் இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியானவருக்கு இடம் கொடுத்து எப்பொழுதும் பரிசுத்த ஆவியானவரின் நிறைவோடு வாழுகிற பொழுது தான் நம்முடைய சரீரத்தை நாம் கறைபடுத்தாத படி பாதுகாத்துக் கொள்ள முடியும்.





அடுத்ததாக தாவீது அழகிய கண்களை உடையவனாய் இருந்தான். அவனது பார்வை மிகவும் சிறப்பாக இருந்தது ; தெளிவாக இருந்தது. நாம் தேவனால் உயர்த்தப்பட வேண்டும் என்று சொன்னால் நாமும் அழகிய கண்களை உடையவர்களாக இருக்க வேண்டும்.



இந்த வெளிப்பிரகாரமான அடையாளம் நமக்கு மற்றும் ஒரு காரியத்தை கற்றுத் தருகிறது. அதாவது நமது கண்களும் மிகவும் அழகான கண்களாக இருக்க வேண்டும் அழகான கண்கள் என்பது தெளிவான கண்கள் என்றோ அல்லது பிரகாசமான பார்வையை கொண்ட கண்கள் என்றோ நாம் பொருட்படுத்த முடியும்.



நாம் சத்தியத்தை அதிகமாய் அடைகிற பொழுது தான் நம்முடைய கண்கள் தெளிவடையும் சங்கீதம் 19 அது அதிகாரத்திலே உம்முடைய சத்தியமே என்னுடைய கண்களை தெளிவாக்கும் என தாவீது குறிப்பிட்டு இருக்கின்றார்.



நம்முடைய பார்வை பிரகாசமாக இருக்க வேண்டும். நாம் சத்தியத்தை அனுதினம் வாசித்து அறிந்து கொள்பவர்களாக , சத்தியத்தை விரும்புகிறவர்களாக இருக்க வேண்டும். சத்தியத்தை நம்முடைய வாழ்க்கையில் நாம் கைக்கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும். மேலும் மேலும் தேவனுடைய வழிகளை நம்முடைய வாழ்க்கையிலே நாம் பெற்றுக்கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும்.



வேதாகமத்திலே குருடான மனிதர்களை குறித்தும் அதாவது பார்வை இருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலரை குருடர்கள் என்றே அழைக்கின்றார். குருடருக்கு வழிகாட்டுகிற குருடர் என்று பரிசேயர் மற்றும் சில வேதபாரர்களை அவர் குறிப்பிடுகிறார். அவர்கள் சத்தியத்தை தெரிந்திருந்தும் அறியாதவர்கள் போல வாழ்ந்ததினால் ஆண்டவர் அவ்வாறு குறிப்பிட்டார்.



அப்போஸ்தலனாகிய பவுல் “ஆண்டவர் உங்களுக்கு பிரகாசமான மன கண்களை கொடுக்கும்படி நான் வேண்டுகிறேன்” என குறிப்பிட்டு இருக்கின்றார். சில கண்கள் மங்கலான பார்வையையோ அல்லது தெளிவற்ற பார்வையோ கொண்டிருக்கும். நாம் அழகான கண்களை கொண்டிருக்கிறோமா? என்று இப்பொழுது நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.



சத்தியத்திலே வாஞ்சை இல்லாமலும் தாகம் இல்லாமலும் இருந்தோமானால் நாம் அழகிய கண்களை கொண்டிருக்க முடியாது. சிலர் ஞாயிறு ஆராதனையில் கொடுக்கப்படும் ஆண்டவருடைய வார்த்தையை மாத்திரமே கேட்கிறார்கள் மற்றும் படி அவர்கள் தனிப்பட்ட ரீதியாக தேவனுடைய வேத வார்த்தைகளை வாசித்து தியானித்து அதிலிருந்து சத்தியங்களை கண்டுகொள்ள விருப்பமற்றவர்களாக இருக்கிறார்கள். வேதாகமத்தை அனுதினமும் வாசிப்பது அனைவருக்கும் கடினமான காரியமாக மாறி இருக்கிறது.





தேவன் மனிதனைப் படைத்தபோது தன்னுடைய சாயலாகவும் தன்னுடைய ரூபத்தின் படியுமே சிருஷ்டித்தார். ஆனால் அவன் பாவம் செய்த போது தேவனுடைய சாயலையும் தேவனுடைய ரூபத்தையும் இழந்து விட்டான் . அவனுக்குள்ளாய் பாவ சுபாவமும் நல்லதல்லாத குணாதிசயங்களையும் அவன் கொண்டிருக்கின்றான். நல்ல ரூபம் என்று சொன்னால் நல்ல சுபாவத்தை உடையவர்கள் அல்லது நல்ல குணாதிசயத்தை கொண்டு இருக்கிறவர்கள் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.



தேவனுடைய குணாதிசயங்களை வேதாகமத்திலிருந்து கண்டுகொண்டு அவைகளை நம்முடைய வாழ்க்கையில் அப்பியாசப்படுத்த வேண்டும். வேதாகமத்தை நாம் கவனமாக படித்தால் தேவன் இரக்கம் உள்ளவராய் இருக்கின்றார், அன்புள்ளவராய் இருக்கின்றார், நியாயமாய் நீதியாய் கிரியைகளை நடக்கிறவராய் இருக்கின்றார், அவரிடத்தில் பட்ச பாதம் இல்லை, அவர் தாராள தன்மையைக் கொண்டிருக்கின்றார், அவர் பரிசுத்தம் உள்ளவராய் இருக்கின்றார், அவர் நன்மைகளை செய்கிறவராக இருக்கின்றார் ஆகவே நாம் இந்த தன்மைகளை வேதாகமத்தை வாசித்து கண்டறிந்து அவைகளை நம்முடைய சுபாவங்களாக நாம் மாற்ற வேண்டும்.



இயற்கையான மனிதன் அநீதி செய்யவும், சண்டை செய்யவும், கலகம் விளைவிக்கவும், தீமை செய்யவும் நன்றாய் அறிந்திருக்கின்றான். இவைகள் நல்ல ரூபத்தை கொண்டு இருப்பதற்கான அடையாளங்கள் அல்ல. நாம் நல்ல பண்புகளை உடையவர்களாக இருக்க வேண்டும் என்று சொன்னால் தேவனுடைய நல்ல சுபாவங்களை நம்மிடையே நாம் கொண்டிருக்க வேண்டும்.



இவைகளை விட இன்னும் பரிசுத்த வேதாகமத்தை தியானிக்கிறபோது பழைய ஏற்பாடு புதிய பாடல் என தனிப்பட்ட ரீதியாய் பக்கம் பக்கமாக நாம் அநேக தெய்வீக சுபாங்களை நாம் காண முடியும்.



அப்போஸ்தலாகிய யோவான் சொல்லுகிறார் நாம் ஆண்டவரே இயேசு கிறிஸ்து நடந்தபடியே நடக்க வேண்டும் என்பதாக!!. அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார் நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அச்சு அடையாளங்களை என் வாழ்க்கையில் தரித்திருக்கிறேன் என்பதாக.



ஆகவே அவருடைய தாழ்மை அவருடைய பொறுமை அவருடைய எளிமை அவருடைய கீழ்படிவு என்பனவும் நம்முடைய வாழ்க்கையின் நல்ல ரூபமாக அமையும் என்பதை நாம் மறந்து போகக்கூடாது. நாம் கோபக்காரர்களாகவும் நாம் பெருமை பிடித்தவர்களாகவும் அகங்காரமிக்கவர்களாகவும் கடின கழுத்துள்ளவர்களாகவும் பிடிவாதம் உள்ளவர்களாகவும் பெருமை பிடித்தவர்களாகவும், பொதுவாகவே நம்முடைய இருதயம் இவ்வாறு காணப்படுகிறது.



ஆனால் இவைகள் நல்ல ரூபத்தை வெளிப்படுத்த முடியாது நாம் வேதாகமத்தை வாசித்தது அதன் அடிப்படையில் நம்முடைய சுபாவங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் நம்முடைய பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் தேவனுடைய நல்ல சுபாவங்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்க வேண்டும்.



அதற்காக நாம் அதிகமாக இப்படி ஆசைப்படுகிற பொழுது நிச்சயமாக இதே வண்ணமே ஆசீர்வதித்து உயர்த்துகிறவராக இருக்கிறார் உயர்வுகள் மேன்மைகள் நமக்கு அவசியம் என்று சொன்னால் நிச்சயமாக இந்த மூன்று சுபாவங்களையும் நாம் கொண்டிருக்க வேண்டும்.



உயர்வுகள் மேன்மைகள் நமக்கு அவசியம் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் இவைகளை படி வாழ்வது நமக்கு கொஞ்சம் கடினமான ஒரு காரியமாக இருக்கலாம். ஆனால் நாம் முயற்சி செய்கிறபோது நிச்சயமாகவே தேவன் நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவதை நாம் கண்டு கொள்ளலாம்.



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *