நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!!
இஸ்ரவேல் புத்திரர்கள் தங்களுடைய வாழ்க்கையிலே பல பள்ளத்தாக்குகளை கடந்த அனுபவத்தை பெற்றிருந்தார்கள். பள்ளத்தாக்கு என்பது ஒரு பயத்தின் அனுபவத்தை கொண்ட மரண அனுபவம் ஆகும். அது ஒரு இருளின் அனுபவம் ஆகும் தாவீது ராஜா சொல்கிறான்; நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் ஒரு பொல்லாப்புக்கும் பயப்படேன். தேவரீர் என்னோடு கூட இருக்கிறீர் உமது கோலும் உமது தடியும் என்னை தேற்றும் என்பதாக.
கிறிஸ்தவர்களாக நாங்களும் பல நேரங்களிலே சில பல பள்ளத்தாக்கின் அனுபவங்களை கடக்க வேண்டிய ஒரு சூழல் எங்களுக்கும் ஏற்படலாம். இஸ்ரவேல் புத்திரர்கள் பெற்றுக்கொண்ட மூன்று பள்ளத்தாக்கின் அனுபவங்களை குறித்து இந்த நாளிலே நாங்கள் தியானித்துக் கொள்ளலாம்.
முதலாவதாக ஈரோத் என்கிற பள்ளத்தாக்கின் அனுபவத்தை குறித்து நாங்கள் பார்க்கலாம்.
எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் அவனுடைய குதிரை வீரரோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்து போய் சமுத்திரத்தண்டையில் பாகால் செபோனுக்கு எதிராய் இருக்குற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயம் இறங்கிருக்கிற அவர்களைக் கிட்டினார்கள்.
இஸ்ரவேலர் இப்போதுதான் எகிப்தில் இருந்து வெளியே வந்து இருக்கிறார்கள்.. அவர்களுக்கு முன்பதாக இப்போது செங்கடல் ஒரு பெரிய தடையாக அமைந்திருக்கிறது.பின்னுக்குத்தான் போவோம் என்றாலும் பின்புறமாக ஏகிப்திய படைகள் இப்போது அவர்களை நெருக்கி வந்து கொண்டு இருக்கிறது. ஆகவே எதுவும் செய்ய முடியாத பெரிய இக்கட்டான நிலையில் மாட்டிக்கொண்டு இருந்தார்கள். ஒன்றில் கடலை நீந்தி சென்று கடக்க வேண்டும் இல்லையென்றால் பார்வோனையும் அவன் சேனையையும் எதிர்த்து நின்று போராடி ஜெயம்பெற வேண்டும்.
இரண்டையுமே செய்ய முடியாதபடி மாட்டிக்கொண்டனர். இந்த நிலையிலிருந்து இன்னும் ஒரு காரியத்தை அவர்கள் செய்தனர். ஆண்டவராகிய தேவனை நோக்கி கூப்பிட்டார்கள் என்று வசனம் பத்தில் நாங்கள் வாசிக்கிறோம். ஆம்! தேவன் அவர்களுக்கு அற்புதம் செய்தார். முன்னே இருந்த கடலை அவர் பிளந்தார். பின்னால் இருந்த சேனையையும் அதே கடலில் அமிழும்படி செய்தார்.ஆம்! பெரியமானவர்களே! உங்களது வாழ்விலும் முன்னே முன்னேற முடியாத படியும் பின்னே பின்னிட செய்ய முடியாத படி பெரியதான ஒரு இக்கட்டான சூழலில் நீங்கள் மாட்டிக்கொண்டு இருக்கலாம். சில பொருளாதார நெருக்கடிகள், குடும்ப பிரச்சினைகள், பண நெருக்கடிகள், இன்னும் பலவிதமான தோல்விகள் உங்களை முன்னேற செய்யவிடாது, பின்னும் செல்லவிடாது, முட்டி மோதிக்கொண்டு இருக்கலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது இன்னும் அதிக தீவிரமாக ஆண்டவரைத் தேட வேண்டியது ஒன்றுதான்.அவரது முகத்தை நோக்கிப் பார்க்க வேண்டிய ஒரே காரியத்தைத்தான் நாங்கள் செய்ய வேண்டும். தேவன் முன்பக்கமாக இருந்த செங்கடலுக்கும், பின் இருந்த படைக்கும் அற்புதத்தை அவர் செய்ய வல்லமையுள்ளவராய் இருந்தார். அவரால் எந்தப் பக்கமும் எப்பேர்ப்பட்ட அற்புதத்தை செய்ய முடியும்.நம்முடைய ஆண்டவர் எல்லா சூழ்நிலைகளிலும் எந்த விதத்திலும் செயற்பட வல்லமையுள்ளவர் என்பதை நாங்கள் விசுவாசிக்க வேண்டும்.
தாவீது சொன்னார் ஆண்டவர் என்னை எல்லா இக்கட்டுகளிலிருந்து விடுவித்தார் என்பதாக. ஆம் அவருக்கு அனேக சத்துருக்கள், எதிர்ப்புக்கள், அதிகமான பகைமைகள் நிறைந்திருந்தது. எல்லாவற்றிலுமிருந்து கர்த்தர் என்னை விடுவித்தார் என்று அவர் தேவனை மகிமைப்படுத்துகின்றார். நாம் நமது சுயத்திலே போராடுவோம் என்றால் பல நேரங்களிலே தோல்வியைத்தான் அடைந்துவிடுவோம். கர்த்தரை எப்பொழுதும் நம்புவோம், கர்த்தரை எப்பொழுதும் சார்ந்திருப்போம்.
இந்த ஈரோத் பள்ளத்தாக்கின் அனுபவம் போல நம்முடைய வாழ்க்கையிலேயும் முன்னும் பின்னும் செல்ல முடியாதபடி நெருக்கடியான சூழல் எங்களுடைய வாழ்க்கையிலேயும் இருக்கலாம். கர்த்தரை நம்புவோம், விசுவாசிப்போம், அவரை நோக்கி கூப்பிடுவோம், அவரை சார்ந்திருப்போம் அவர் நம்முடைய வாழ்க்கையிலே பெரிதான அற்புதத்தைச் செய்வார்.
இரண்டாவதாக ஆகோர் பள்ளத்தாக்கின் அனுபவத்தைக் குறித்து நாங்கள் தியானிக்கலாம்.
யோசுவா 7.24,25,26 வசனங்களை நாங்கள் வாசிக்கலாம். அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூட சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன்பாளத்தையும், அவன் குமாரரையும், குமாரத்திகளையும், அவன் மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள். அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி; அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.
இந்த பள்ளத்தாக்கு, வெற்றியோடு வலம் வந்து கொண்டிருந்த இஸ்ரவேலரை தடுத்து தோல்வியை அடைய பண்ணிய அனுபவத்தை ஏற்படுத்திய பள்ளத்தாக்காகும். ஒருவன் செய்த பாவத்தினால் பலர் இறந்து போகவும் ஜனங்களது இருதயம் தண்ணீராய் கரைந்து போகப் பண்ணினதுமான ஒரு அனுபவத்தைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்கு ஆகும். யோசுவா என்கிற ஒரு பெரிய வீரரை முகங்குப்புற விழுந்து அழச்செய்த அனுபவம் கொண்ட ஒரு பள்ளத்தாக்கு ஆகும். இஸ்ரவேலரை கலங்கப் பண்ணி கதறப் பண்ணிய அனுபவம் கொண்ட ஒரு பள்ளத்தாக்காக நாம் இந்த ஆகோர் பள்ளத்தாக்கை கருத முடியும்.
ஆகான் என்கிற ஒரு மனிதன் இச்சை கொண்டவனாய் செய்யத்தக்காத ஒரு காரியத்தை அவன் செய்ததினால் முழு இஸ்ரவேலரும் கிரயம் செலுத்த வேண்டியதாக இருந்தது. அவர்கள் அழுது புலம்ப வேண்டியிருந்தது கலங்கி தவிக்க வேண்டியிருந்தது. தோல்வியினால் துவள வேண்டியிருந்தது இதுதான் ஆகோர் பள்ளத்தாக்கு.
அன்பானவர்களே!! பல வேளைகளில் நம்முடைய வாழ்விலேயும் சில தோல்விகள், சில அழுது புலம்பும் சூழல்கள் சில கலங்கி தவிக்கும் வேளைகள் இப்படி எல்லாம் அதிகமான சூழல்கள் வந்திருக்கலாம். என்ன காரணம் என்று தெரியாமல் வாழ்வில் ஒரு கசப்பான அனுபவத்தை அனுபவிக்கும் தருணங்கள் ஏராளமாய் வந்திருக்கலாம். நான் எல்லாமே சரியாகத்தானே இருக்கிறேன் எதுவித பிழையுமே செய்யாமல் ஏன் எனக்கு தொல்லை?, ஏன் எனக்கு இளைப்பு?, ஏன் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை என்ற அனுபவத்தை சில நேரங்களில் நீங்கள் பெற்றிருக்கிறீர்களா? அப்படி ஒரு சம்பவத்தை, அப்படி ஒரு காரியத்தை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் அது சில நேரங்களில் எங்கள் குடும்பத்தில் ஒருவரது தவறினால் கூட அது ஏற்பட்டிருக்கலாம். அது ஒருவேளை எங்கள் சந்ததியில் உள்ள ஒருவரது சாபத்தீடான வேலைகளின் வெளிப்பாட்டில் எழுந்த பிரச்சினையாகக் கூட இருக்கலாம்.
அன்பானவர்களே! அதைக் குறித்து நாங்கள் கலங்க தேவையில்லை. இந்த ஆகோர் பள்ளத்தாக்கின் அனுபவத்துக்குள்ளாகி ஒருவேளை நீங்கள் இருப்பீர்கள் என்றால் கல்வாரி சிலுவை ஒன்றே நம்முடைய தஞ்சமா இருக்கிறது. அவரண்டை நாங்கள் சேரும் போது இந்த ஆகோர் பள்ளத்தாக்கின் அனுபவத்தை நாங்கள் கடந்து செல்ல கர்த்தர் நமக்கு நிச்சயமாக உதவி செய்வார்.
மூன்றாவதாக இந்த ஏலா பள்ளத்தாக்கின் அனுபவத்தைக் குறித்து நாங்கள் தியானித்து பார்க்கலாம்.
1 சாமுவேல் 17ஆது அதிகாரம் இரண்டாவது வசனம் சவுலும் இஸ்ரவேல் மனிதரும் ஒருமித்து கூடி ஏலா பள்ளத்தாக்கிலே பாளயம் இறங்கி பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்துக்கு அணிவகுத்து நின்றார்கள்.
இஸ்ரவேலர் தம்முடைய தேசத்திலே சுகத்தோடு நன்றாக வாழ்ந்து கொண்டு இருந்த வேளை பெலிஸ்தர் கூடி வந்து இவர்களுக்கு எதிராய் யுத்தம் பண்ண புதிய ஒரு திட்டத்துடன் புதிய ஒரு வியூகத்துடன் வந்திருக்கார்கள். அது என்னவென்று சொன்னால் ஒருவனுடன் சண்டை பண்ணி முழு தேசத்தையும் அடிமைப்படுத்திக் கொள்வது தான் அவர்கள் திட்டம். தமது தரப்பில் இராட்சதனாகிய கோலியாத்தை ஆயத்தம் பண்ணி வைத்திருந்தார்கள். இராட்சதனுடன் போர் செய்ய ஒருவனை அழைத்துக்கொண்டு இருந்தார்கள்.
சவுல் தரப்பில் யாருமே இந்த ராட்சதனுடன் போர் செய்ய போவதற்கு தயாராக இருக்கவில்லை. கடைசியாக தாவீது என்ற ஆடு மேய்ப்பனாகிய வாலிபன் இங்கு வந்து இந்த இராட்சதனுடன் போர் செய்து வெற்றி பெற்ற இடம் தான் இந்த ஏலா பள்ளத்தாக்கின் அனுபவமாகும். இங்கே இஸ்ரவேலர் மிகவும் பயந்து வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். விலகி ஓடிப்போவார்கள், கலங்கி தவித்தனர் என்கிற வார்த்தைகளை நாங்கள் வாசிக்கலாம். அடிக்கடி இராட்சத மனிதன் கோலியாத் என்கிற ஒருவன் எல்லோரையும் பயப்படுத்தினான், சிதறடித்தான், கலங்கடித்தான்.
ஆனால் கடைசியாக இஸ்ரவேலர் வெற்றி பெற்ற அந்த பள்ளத்தாக்குத்தான் ஏலா பள்ளத்தாக்கு ஆகும். அன்பானவர்களே! சில வேளைகளில் ஒரே ஒரு பிரச்சினை, ஒரே ஒரு நெருக்கடி, ஒரே ஒரு காரியம் உங்களை பயமுறுத்தி கலங்கப் பண்ணி உங்களை சிதறப் பண்ணி உங்களை அங்கே மிரண்டு போக செய்து கொண்டிருக்கலாம். ஒருவேளை அது ஒரு பாரமாக கூட இருக்கலாம்; நீண்ட காலமாக அது உங்களை அடிமைப்படுத்தி மேற்கொள்ளும் ஒரு காரியமாக கூட இருக்கலாம். யாருக்கும் அறியாத அந்தரங்கமான வாழ்வில் ஒரு ராட்சதனை போல நின்றுகொண்டு உங்களுடைய வாழ்வில் அது ஒரு ஜெயத்தை பெற முடியாத படி உங்களை பயமுறுத்திக்கொண்டு இருக்கும் ஒரு காரியமாக கூட இருக்கலாம். இந்த ஏலா பள்ளத்தாக்கின் அனுபவத்தையும் தாண்ட ஆண்டவர் உங்களுக்கு பெலன் தருவார்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!

