img 20251026 wa0000

தகுதியற்றவர்களை தேவன் ஏன் ஆசீர்வதிக்கின்றார் – நான்கு காரணங்கள்/ Tamil Bible short message



தேவனால் எப்படிப்பட்ட மனிதனுக்கு உதவி செய்ய முடியும்? எதற்காக தேவன் ஓர் மனிதனுக்கு நன்மைகளை வழங்குகிறார்? பாவிகள், துரோகிகள் கூட தேவனது ஆசீர்வாதங்களை, ஏன் சில வேளைகளில் அவரது நடத்துதல்களை கூட பெற்று கொள்கின்றார்களே! ஏன் அவ்வாறு தேவன் செய்ய வேண்டும்?



ஆகாப் என்ற இஸ்ரவேல் இராஜாவும் தேவனுடைய மேன்மையான ஈவுகளை அனுபவித்த ஒருவர். தொடர்ச்சியாகவே சில நன்மைகளை தேவனிடம் இருந்து பெற்று கொண்டவர். ஆனால் தனக்கு முன்னர் வாழ்ந்த இராஜாக்களை விட கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்ததாக 1 இராஜாக்கள் 16:30 இல் வாசிக்கின்றோம்.



இதற்கு அடுத்த வசனங்களை நாம் வாசிக்கும் போது அவனது சுய ரூபத்தை இலகுவாக அறியலாம். நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு, தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான். ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான்.



இப்படிப்பட்ட மனிதனுக்கு தேவன் ஏராளமான நன்மைகளை, ஆசீர்வாதங்களை வழங்கி இருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எந்த ஓர் காரணத்திற்காக தேவன் இவ்வாறு செய்ய வேண்டும்? பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் 1 இராஜாக்கள் 20 வது அதிகாரத்தை ஆராய்ந்து நான்கு காரணங்களை அறிந்து கொள்வோம்.





1 இராஜாக்கள் 20 :1 இல் சீரிய இராஜாவாகிய பெனாதாத்தும் வசனம் இரண்டில் இஸ்ரவேலின் இராஜாவாகிய ஆகாப் என்றும் அறிமுகம் செய்யப்படுகிறது.



தொடர்ச்சியாகவே இந்த அதிகாரத்தை நாம் வாசித்தால் பன்னிரண்டு தடவைகளுக்கு மேல் இஸ்ரவேலின் இராஜா, இஸ்ரவேலின் இராஜாவாகிய ஆகாப் என்றே ஆகாப்பின் பெயர் இடம்பெறுகிறது. அதாவது சாதாரணமாக ஆகாப் என்றால் எமக்கு தெரியும் அது இஸ்ரவேலின் இராஜாவை தான் குறிக்கிறது என.



ஆனால் அவ்வாறு குறிப்பிடப்படுவதால் அது எமக்கு ஓர் செய்தியை வெளிப்படுத்துகிறது. அதாவது ஆகாப் என்பவர் இஸ்ரவேல் தேசத்து இராஜா. அந்த இஸ்ரவேல் என்பது தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததி. அவரால் அழைக்கப்பட்ட அவரது ஜனங்கள் வாழும் தேசம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பூமி.



இங்கே ஆகாப் பொல்லாத ராஜாவாக இருந்தாலும் தேவன் உண்மையும் நீதியுள்ளவராக இருந்ததால் அவர் நன்மையை செய்கிறார். ஆண்டவர் தான் தெரிந்து கொண்ட பிள்ளைகளுக்கு நன்மை செய்கிறார். அவருடைய அழைப்பு மாறாதது. அழைத்தவர் ஆசீர்வதிக்கவும் செய்கிறார். மனிதன் மாறினாலும் தேவன் மாறாதவராக இருக்கிறார்.



சில பிள்ளைகள் கடினமான நடத்தையை காண்பித்தாலும் பெற்றோர்கள் அவர்களுக்கு தேவையான நன்மைகளை வழங்குகின்றனர். இந்த உலகத்து பிதாக்களை விட மேலானவரான தேவனும் தனது பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.



அதனால் என்ன சொல்லுவோம். நாம் பாவத்தில் நீடிக்க முடியுமா? தேவ தயவை உதாசீனம் செய்ய முடியுமா? இல்லையே!! நம்மை ஆராய்ந்து பார்த்து ஆண்டவரது சமுகத்தில் நம்மை தாழ்மைப்படுத்துவோம். அவரது அழைப்புக்கு பாத்திரவான்களாக நடந்து கொள்வோம். அவரது தெரிந்து கொள்ளுதலுக்கு நன்றியுள்ளவர்களாக ஜீவிப்போம்.





வசனம் 13 இல் தேவன் ஓர் தீர்க்கதரிசியை அனுப்புகிறார். அந்த வசனத்தை பாருங்கள்; அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் வந்து: அந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.



வசனம் 28 இல் தேவன் ஓர் தேவனுடைய மனுஷனை அனுப்பியதாக வாசிக்கின்றோம். அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.



வசனம் 35 இல் தேவன் ஓர் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களில் ஒருவனை அனுப்பியதாக வாசிக்கின்றோம். அப்பொழுது தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படி தன் தோழனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனுஷன் அவனைப்பார்த்து அடிக்கமாட்டேன் என்றான்.



ஆகாப் தீர்க்கதரிசியிடம் தேவன் தன்னுடைய தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய மனிதர்களையும் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களையும் மாறி மாறி அனுப்பிக்கொண்டு இருந்தமை தேவன் எவ்வளவாய் அவனை சிநேகித்தார் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.



எப்படி ஆகிலும் ஒரு மன மாற்றத்தை ஆகாப் கொண்டு வரலாம் என்கின்ற தான ஓர் பெரிதான எதிர்பார்ப்போடு தேவன் செயற்பட்டதாக நாம் எடுத்துக் கொள்ள முடியும். மறுபடி மறுபடி தேவன் ஆகாப் இராஜாவுடன் இடைபட்டுக் கொண்டிருக்கிறார்.



ஆனால் அவனோ மனம் மாறும் படி எந்தவித விருப்பத்தையும் கொண்டிருக்கவில்லை. ஒருவேளை மாறுதலாக அவன் நினைத்துக் கொண்டு இருக்கக்கூடும். அதாவது தேவன் தன்னைத் தேடி வருகிறார், தன்னுடைய தீர்க்கதரிசிகளை என்னிடம் அனுப்பிக் கொண்டே இருக்கின்றார் ஆகவே நான் அவருக்கு பிரியமாக தான் நடந்து கொண்டிருக்கின்றேன் என தவறாக நினைத்து இருக்க முடியும்.



தேவன் நம்மை நேசிக்கிறார், அவர் எவ்வளவாய் எம்மில் அன்பு கூறுகிறார் என்பதை நாம் சில வேளைகளில் புரிந்து கொள்ள தவறி விடுகிறோம். அவர் நம்மில் வைத்த அன்பின் நிமித்தமாய் சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் ஜெயத்தையும், வெற்றியைம், நன்மைகளையும், ஆசீர்வாதங்களையும் அருளுகிறவராக இருக்கிறார்.



அந்த ஆசீர்வாதங்களின் அடிப்படையில் – நாம் தேவனுடைய பிள்ளைகள், நான் பரிசுத்தமாய் இருக்கிறேன், எண்ணில் எந்தவிதமான பிழையும் இல்லை என்கின்ற தான ஒரு எண்ணத்தில் நாம் வரக்கூடாது. நம்மை நாமே நிதானித்து பார்த்து நாம் மனம் திரும்புபவர்களாக இருக்க வேண்டும்.



நம்முடைய வாழ்க்கையை பரிசோதனை செய்து நாம் உண்மையாகவே பரிசுத்தமான வாழ்க்கைக்குள் கடந்து வர வேண்டும்.





ஆகாப் இராஜாவின் படையில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை நாம் வசனம் 15ஐ வாசிக்கிறபோது கண்டுகொள்ள முடியும். அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரை இலக்கம் பார்த்தான், அவர்கள் இருநூற்று முப்பதிரண்டுபேர்; அவர்களுப்பின்பு, இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனத்தின் இலக்கமும் பார்த்து ஏழாயிரம்பேர் என்று கண்டான்.



ஆனால் எதிரணியில் 32 ராஜாக்கள் ஒன்று கூடி இருந்ததாக வசனம் ஒன்றிலும் அவர்களுடன் ஏராளமான ஜனங்கள் இருந்ததை வசனம் 13ஐ வாசிக்கிற போதும் நாம் கண்டுகொள்ள முடியும். இப்படிப்பட்ட மிகப் பிரமாண்டமான படை அணியை சாதாரணமாக 7000 வீரர்களுடன் போய் ஜெயிப்பது என்பது உண்மையில் முடியாத ஓர் காரியமாக இருக்கிறது.



இருந்தாலும் இங்கே ஆகாப் இராஜாவுக்கு வெற்றி கிடைப்பதற்கு மிக முக்கியமான காரணம் தேவனுடைய கிருபை மாத்திரமே. ஆகாப் இராஜாவிடம் இருந்த ஞானமோ அல்லது திறமையோ அல்லது அவனுடைய படையின் புத்திசாலித்தனமோ எதுவுமே இல்லை. நிச்சயமாகவே தேவனுடைய கிருபை ஒன்றே அவனுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது.



தகுதி இல்லாத ஒருவருக்கு கிடைக்கும் ஈவு தான் கிருபை ஆகும். உண்மையில் ஆகாப் எந்தவித தகுதியையும் தன்னகத்தே கொண்டு இருக்கவில்லை. அவர் மிகவும் மோசமானவராகவும் பொல்லாதவராகவும் நடந்து கொண்டார்.



அவருடைய வாழ்க்கையில் எதுவித பரிசுத்தமும் உண்மையும் இருக்கவில்லை. இத்தனைக்கு மத்தியிலும் தேவனுடைய கிருபை ஒன்று இருந்ததினால் இந்த பெரிய வெற்றியை அவரால் சுவைக்க கூடியதாக இருந்தது. கிருபை மட்டும் கிடைத்திருக்காவிட்டால் ஆகாப் இராஜாவின் கதையை இலகுவாக அந்த எதிரணியினரால் முடித்திருக்க முடியும்.



அவர்களுடன் 32 ராஜாக்கள் இருந்ததாக நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம். அத்தனை இராஜாக்கள் இருந்தும் இவன் தோற்கடிக்கப்பட முடியாமற் போனமைக்கான காரணம் தேவன் அவன் மேல் வைத்த கிருபை ஒன்றே!.



உங்கள் வாழ்விலும் சில வெற்றிகள், சில மேன்மைகள், சில நன்மைகள், சில ஆசீர்வாதங்கள் வியத்தகு முறையில் உங்களுடைய வாழ்வில் கிடைத்திருக்கலாம். ஆனால் அவைகள் உங்களுடைய பலத்தினாலேயோ அல்லது உங்களுடைய ஞானத்தினாலேயோ அல்லது உங்களுடைய திறமையினாலேயோ உங்களிடம் சேரவில்லை. ஆண்டவருடைய கிருபையினாலே தான் அவைகள் கிடைத்து இருக்கின்றது.



இவைகளை நாம் சிந்தித்து நம்முடைய வாழ்க்கையை நாம் பரிசுத்தமாகவும் உண்மையாகவும் நீதியாகவும் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும்.





வசனம் – 28 அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.



இங்கே சீரியர் தேவனை மட்டுப்படுத்தி பேசுகின்றனர். அதாவது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர் மலை தேவர் என்றும் அதாவது மலைகளில் மேல் நடந்த யுத்தத்தினால் தான் அவர்கள் ஜெயித்திருக்கிறார்கள் ஒருவேளை பர்வதத்திலேயோ அல்லது சமனான பூமியிலேயோ இந்த யுத்தம் நடந்திருந்தால் அந்த தேவனால் இந்த இஸ்ரவேலருக்கு உதவி செய்திருக்க முடியாது என சீரியர் பேசிக்கொண்டார்கள்.



இந்த ஒரு காரணத்தின் நிமித்தமாய் அதாவது சத்துருக்களின் இந்த பேச்சின் நிமித்தமாய் தேவன் மறுபடியும் ஆகாப் இராஜாவிடம் தேவனுடைய மனுஷனை அனுப்பி அவர்கள் இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசியதனால் இந்த யுத்தத்திலும் வெற்றி கிடைப்பதாக தேவன் சொல்லுகிறார்.



மறுபடியும் இங்கே யுத்தம் செய்ய சீரியர் தயாராக வருகிறார்கள், இந்த முறையும் ஆகாப் மிகப்பெரிய வெற்றியை பெறுகிறார். அவர் ஜெயத்துக்கு மேல் ஜெயத்தை பெற்றார். வெற்றிக்கு மேல் வெற்றியைப் பெற்றார்.



ஆனால் உண்மையில் இந்த வெற்றி அவருடைய வாழ்க்கையில் எதிராளிகள் நிமித்தமாய் சத்துருக்கள் நிமித்தமாய் கிடைத்த வெற்றி ஆகும்.



அன்பானவர்களே பல நேரங்களிலே தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார், வெற்றிக்கு மேல் வெற்றியை தருகிறார் ஏனென்றால் புற ஜாதிகள் நிமித்தமாய் நம்மை சுற்றியுள்ள எதிராளிகள் நிமித்தமாகவும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கின்றார்.



ஆனால் பல நேரங்களில் நாம் இந்த ஒரு ஆசீர்வாதத்தை சாதாரணமாக பார்க்கின்றோம் நம்முடைய திறமைகளும் நம்முடைய பலமும் ஒன்றும் இல்லை நாம் அவரை சார்ந்து கொள்ளாமல் வாழ்ந்தாலும், நாம் அவருக்கு எதிரானவர்களாக வாழ்ந்தாலும் பல நேரங்களில் சில வெற்றிகளை தொடர்ச்சியாக பெறுகிறவர்களாக இருக்கிறோம்.



அதற்கு காரணம் ஆண்டவர் எதிராளிகளின் பேச்சு நிமித்தமாக அதாவது தன்னுடைய சத்துருக்களின் வார்த்தைகளின் நிமித்தமாய் கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கின்றார். இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டு தேவனுக்கு முன்பாக ஓர் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை வாழுவோம். பரிசுத்த வாழ்வை வாழ்வோம். பயபக்தி உள்ள வாழ்வை வாழ்வோம். அப்போது நிச்சயமாகவே தேவன் உண்மையாகவே நம்மை ஆசீர்வதிப்பார்



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *