நல்ல ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே, அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக; இந்த நாளில் ஒரு தலைவர் விடக்கூடாத ஆறு தவறுகளைக் குறித்து நாம் தியானித்து பார்ப்போம். பரிசுத்த வேதாகமத்தில் யூதா தேசத்தின் ராஜாவாகிய மனாசே என்பவரின் வாழ்க்கை சரிதையை ஆராய்ந்து மிக முக்கியமான ஆறு குறிப்புகளை இந்த நாளிலே நாம் தியானித்துக்கொள்ளுவோம். முதலாவதாக இரண்டு நாளாகமம் 33.3ம் வசனத்தை நாம் வாசிப்போம்.அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் சேனையையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளைச் சேவித்து,இங்கே மனாசே ராஜாவாக வந்ததும் தனது தகப்பனது முன்மாதிரியைப் பின்பற்றி இருக்கலாம். எசேக்கியா ராஜா மிகச் சிறப்பான ஆட்சியைத்தான் செய்திருந்தார். ஆகவே, அவரது அடிச்சுவட்டில் மனாசே நடந்திருக்கலாம்.அதனைவிட, வேதாகமம் அடிக்கடிக் காண்பிக்கும், அதாவது ராஜாக்களுக்கு முன்மாதிரியாகக் காண்பிக்கும் தாவீதின் வழியிலும் நடந்திருக்கலாம். அவர்கள் தம்வாழ்வில் பெற்றிருந்த வெற்றிகள், ஆசிர்வாதங்கள், நன்மைகளை மனாசே நன்றாக அறிந்துகொண்டு, அவர்களைப் பின்பற்றி இருக்கலாம்; ஆனால் ஒன்றுக்கும் உதவாத வழிதவறியவர்களின் வழியில் நடந்துகொள்ள அவர் பேராசை கொண்டார்.அதில் இருந்துகிடைத்த இன்ப சந்தோசங்கள் கர்த்தரை தெய்வமாகக் கொள்ள மனாசேக்குத் தடையாக இருந்தது. அன்பானவர்களே, பரிசுத்த வேதாகமத்திலும் நாம்வாழும் உலகத்திலும் நமது முன்னோர்களின் முன்மாதிரியை உற்றுக் கவனிக்கவேண்டும். அவர்கள் கர்த்தர் மீது கொண்ட நேசத்தையும், அன்பையும், விசுவாசத்தையும், கீழ்ப்படிவையும் பார்த்து கர்த்தரை உத்தமமாகப் பின்பற்ற நம்மை அர்ப்பணிக்கவேண்டும்.துன்மார்க்கமாய் நடந்தோரின் முடிவு துன்பமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்டோரை பின்பற்றுவதால் எம் வாழ்வும் துன்பத்தில் தான் முடிவடையும். பாவ சேற்றில் உழன்று கொண்டிருப்பதும் ஒரு வகையில் இன்பத்தை உண்டாக்கும் ஆனால் அது பேராபத்தில் தான் முடிவடையும். அப்படிப்பட்ட இன்பம் கர்த்தரை நாம் தேவனாக ஏற்றுக் கொள்வதை தடுத்துவிடும். நான் கிறிஸ்துவை பின்பற்றுவது போல் நீங்களும் என்னை பின்பற்றுங்கள் என்று பவுல் அறைகூவல் விடுக்கின்றார்.நாம் இயேசு கிறிஸ்துவின் கிரிஸ்துவின் அச்சடையாளங்களைத் தரித்துக்கொண்டு அவரைப் பின்பற்றி வாழ வேண்டும். அவர் நடந்த படியே நாம் நடக்க வேண்டும். அவரது அடிச்சுவட்டில் நடக்க நாம் உண்மையாய் எம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். பாவத்தில் கிடைக்கும் சுகம் பெரிய சுமை என்பதை நாம் மறக்கக் கூடாது. பாவசந்தோசம் பெரிய ஆபத்தில் சிக்க வைக்கும் என்பதை உணர்ந்து வாழ வேண்டும். நாம் நமது முன்னோர்களை உற்றுநோக்கி பரிசுத்த வழியில் அதாவது தேவ வழியில் நடக்க நம்மை அர்ப்பணிப்போம். அதாவது ஒரு தலைவனாக நமது முன்னோர்கள் காண்பித்த நல்ல வழிகளில் நாம் நடக்க தயங்கக் கூடாது. இரண்டாவதாக, இரண்டு நாளாகமம் 33: 3,4,5 ஆவது வசனங்களை நாங்கள் வாசிக்கின்ற போது மனாசே அனேக காரியங்களை செய்கின்றதை அறிந்து கொள்ளலாம். அதாவது தன்னுடைய தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப் போட்ட மேடைகளை திரும்பவும் கட்டி, பாகால்களுக்கு பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரக தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் சேனைகளை பணிந்து கொண்டு, அவைகளை சேவித்து, கர்த்தருடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி, கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிரகாரங்களில் வானத்தின் சேனைகளுக்கு எல்லாம் பலிபீடங்களைக் கட்டி, தீ மிதித்து, நாள் பார்த்து, பில்லி சூனியங்களை அனுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறி சொல்லுகிறவர்களையும் வைத்து இவ்விதமாய் மிகுதியான காரியங்களை அவன் செய்து கொண்டிருக்கிறான். மனாசே பல்வேறு விதமான தவறான காரியங்களை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். ஒன்றன்பின் ஒன்றாக பல கிரியைகளை அவர் செய்கிறார்; ஆனால் அவைகள் எல்லாமே தங்கு தடை இன்றி நடப்பிக்கப்படுகிறது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். இவைகள் எல்லாமே பயங்கரமான காரியங்கள், ஆனால் எதுவித தடையும் இன்றி அனைத்தையும் நிறைவேற்றுகிறார். அவர் செய்த அத்தனை காரியங்களும் கைகூடி வந்தது. அன்பானவர்களே, நாம், ஒரு காரியம் கைகூடி வருவதனால் அதைக் குறித்து உணர்வற்றவர்களாக மாறிவிடக்கூடாது. நான் செய்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று தப்பு கணக்கு போட்டு விடக்கூடாது. வேதம் சொல்லுகிறது மனிதனுக்கு அவனது பாதைகள் செம்மையாய் தான் தோன்றும்; ஆனாலும் கர்த்தர் காரியங்களை நிறுத்திப் பார்க்கிறார் என. காரியங்கள் வாய்ப்பதால் நான் சரியாகத்தான் செய்கிறேன் என சிந்திப்பது ஆபத்தானது. இவ்வுலகில் பலருக்கும் பல்வேறு காரியங்கள் கை கூடித்தான் வருகிறது; இவற்றை வைத்து நான் தேவ சித்தம் தான் செய்கிறேன் என்று தவறாக கணித்து விட முடியாது. உண்மையாகவே எமது எல்லா கிரியைகளும் தேவ சித்தத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஒரு திருமண காரியமாக இருக்கலாம், ஒரு தொழில் முயற்சியாக இருக்கலாம், ஒரு கல்வி கற்றலாக இருக்கலாம், ஒரு சபை ஆரம்பகட்ட வேலைகளாக கூட இருக்கலாம், எல்லாமே தேவ சித்தமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். கை கூடி வருவதெல்லாம் கர்த்தருக்கு சித்தமானது என்று பொருள் அல்ல. சகல வித அருவருப்புகளையும் பொல்லாப்புகளையும் மனாசே செய்துகொண்டு இருந்தார். கர்த்தரின் ஆலயத்திலும் பயங்கர கிரியைகளை நடப்பித்தார். எல்லாமே கைகூடியது உண்மைதான் ஆனால் எதுவுமே தேவனுக்குப் பிரியமில்லை.தேவனுக்குப் பிரியமற்ற விடயங்களையே இவர் செய்துகொண்டு இருந்தார். அருமையானவர்களே, தேவனுக்குப் பிரியமற்றதும் அவர் வெறுப்பதுமான கிரியைகளை நாமும் விட்டு விலகி நடந்துகொள்ள வேண்டும். மூன்றாவதாக இரண்டு நாளாகமம் 33:3-6 வது வசனத்திலிருந்து ஏற்கனவே நாங்கள் வாசித்த பகுதிகளிலே இன்னும் ஒரு விடயத்தை நாம் கவனிக்க முடியும்.அதாவது மனாசே பல கிரியைகளை நடப்பிக்கிறார். அவர் செய்த கிரியைகளை மக்கள் யாரும் எதிர்த்ததாக இல்லை. அத்துடன் அவர்களது ஒத்துழைப்பும் இருந்ததால்தான் அவரால் இவ்வாறு செயற்பட முடிந்தது.பொதுவாக ராஜாக்கள் தங்களது மனதில் இருப்பதின்படி செய்ய அவர்களுக்கு அதிகாரம் இருந்தாலும் சில சமயங்களில் மக்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியும் விடுவார்கள். மனாசேயின் தகப்பன் எசேக்கியா ராஜாவுடன் வாழ்ந்த மக்கள் இப்போதும் உள்ளனர். அவரது ஆராதனைக்கு உதவி செய்த ஆசாரியர்கள், லேவியர்கள் இப்போதும் உள்ளனர். ஆனால் இவர் கர்த்தருடைய ஆலயத்தைத் தீட்டுபடுத்தி அதை அசுசிப்படுத்தும்போது யாரும் எதிர்த்துப் பேச முன் வரவில்லை. கேள்வி கேட்க யாரும் எழும்பவில்லை. மாறாக ஆலயத்திலும் தேசத்திலும் சகல சீர்கேடுகளையும் செய்வதற்கு அனேக மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இவருக்குக் கிடைத்துள்ளது. இதனால் தனது மனதும் மாம்சமும் விரும்பிய அத்தனையையும் மனாசே செய்துகொண்டு இருந்தார். தேவப்பிள்ளையே, உனது கிரியைக்கு எதுவித எதிர்ப்பும் இல்லாமல் பல ஆதரவும் ஒத்துழைப்பும் உனக்குக் கிடைப்பதனால் உனது இருதயம் பொல்லாப்பு செய்யத் துணிகரங்கொள்ளக் கூடாது. உனக்குரிய ஆதரவும் ஒத்துழைப்பும் தேவனிடத்தில் இருந்து கிடைக்க வேண்டும். மனிதர்களிடத்திலிருந்து அல்ல, மனித உதவிகள், ஒத்தாசைகள் ஒருவேளை உன்னைக் கொண்டுபோய் ஆபத்தில் விட்டுவிடலாம். ஆனால் தேவ உதவி நித்திய நித்தியமாக உனக்கு ஆசிர்வாதமாக இருக்கும். உண்மையில் மனிதர்கள் மனாசேக்கு உதவி செய்யவில்லை, அவனுக்கு எதிர்காலத்தில் பேராபத்தைக் கொண்டு வரக்கூடிய உதவியைத்தான் இப்பொழுது செய்துகொண்டிருக்கிறார்கள். இதனைச் சரியாகப் புரியாத மனாசே, தனது இஸ்டப்படி கிரியைகளைச் செய்துகொண்டிருக்கிறார். மனிதனை நம்பி கர்த்தரை விட்டு விலகுகிற மனிதன் சபிக்கப்பட்டவன் என்பதாக நாம் வேதாகமத்தில் வாசிக்கின்றோம். எப்பொழுதும் கர்த்தரின் உதவிகளையும் கர்த்தரின் ஒத்தாசையை நம்பி, கர்த்தரோடு இணைந்து வாழுவோம். நான்காவதாக இரண்டு நாளாகமம் 33.9 வது வசனத்தை வாசிப்போம்.அப்படியே, கர்த்தர் இஸ்ரவேலில் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப் பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்பு செய்ய தக்கதாய் மனாசே அவர்களை வழிதப்பிப் போகப் பண்ணினான். மனாசே தான் தவறிழைத்தது மட்டுமல்ல, மற்ற ஜனங்களும் வழிதவறி போகத்தக்கதாய் நடந்துகொண்டான். இவரது தகப்பன் கீழாக, ஜனங்கள் கர்த்தருடன் நெருங்கி நடங்கத்தக்கதாக சூழல் உருவாகி இருந்தது.ஆனால், இவர் எல்லாவற்றையும் சீரழித்து விட்டார். ஒரு தலைவன் கெட்டுப் போனால் நிச்சயம் அவனுக்குக் கீழானோரும் கெடத்தான் செய்வார்கள். அதாவது தலைவன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே தான் போவார்கள்.தேவபக்தியுள்ள மக்களை தேவனைவிட்டுப் பிரித்தே விட்டார் மனாசே. அதுவும் வேதாகம் சொல்லுகிறபடி, அன்னிய புறஜாதி மக்களைவிட மிக மோசமானவர்களாக யூதேயா மக்கள் மாறிவிட்டனர். சரியான வழியில் சென்றவர்களை தவறான வழியில் செல்ல வைப்பது எத்தனை கேடான காரியம்? இயேசு சொல்லுகின்றார், இடறல்கள் வருவது அவசியம், ஆனால் யாரால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!. நாம் மற்றவர்கள் இடறுவதற்கு எதுவான கல்லை வைக்காமல் மக்கள் இடறி விழும் கல்லுகளை நீக்கிவிடும் நல்ல தலைவர்களாக நாம் இருக்க வேண்டும். புதிய ஏற்பாட்டில் வாழும் தேவைப் பிள்ளைகளாகிய நாம் வசனத்தினாலும் கிரியையினாலும் மற்றவர்களை இடறப்பண்ணும் ஒன்றையும் செய்யக்கூடாது. மற்றவர்களை சத்தியத்தில் ஊன்றக் கட்டுவதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். உலகத்து முறைமைகளும் அன்னிய காரியங்களும் மற்றவர்களுக்குள் இடறல்களைக் கொண்டு வரும் என்பதை நாம் மறந்து போகக் கூடாது.இயேசு வேதபாரகர் பரிசேயருடன் பேசும்போது நீங்கள் உங்கள் மார்க்கத்தில் ஒருவனைச் சேர்க்க உலகத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். ஆனால் சேர்த்தவுடன் அவனை நரகத்துக்கு இரட்டிப்பான பங்காக மாற்றுகிறீர்கள் என்பதாக. கிறிஸ்துவண்டை ஒருவரைச் சேரப் பண்ணுவதும் அவரை அதிகமாய் கிறிஸ்துவண்டை நெருங்க வைப்பதுமே ஒரு தலைவனின் பிரதான கடமையாக இருக்க வேண்டும். நாம் ஒருவரை ஒருவர் தேவ வழியில் நடத்திக்கொள்ளவர்களாக இருக்க வேண்டுமே தவிர வழி தவறச் செய்கிறவர்களாக இருக்கக் கூடாது. ஐந்தாவதாக இரண்டு நாளாகமம் கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசின போதிலும் அவர்கள் கவனிக்காதே போனார்கள். கர்த்தர் மனாசேயோடு பேசியும் அவர் அதை பெரிதாக உள்வாங்கவில்லை அவருக்கு கிடைத்த வெற்றிகள் அல்லது அவருக்கு கைகூடி வந்த செயல்கள் இவற்றால் அவர் தேவ வார்த்தையை கவனியாது போனார். கர்த்தருடைய வார்த்தையை கவனிக்க வேண்டுமென்ற அவசியம் அவரிடம் காணப்படவில்லை. அவரைப் பொறுத்தவரையில் கர்த்தருடைய வார்த்தை என்பது இப்பொழுதுக்கு கேளிக்குரியதும் நகைப்பிக்குரியதுமாக தான் இருந்தது. மனாசே மட்டுமல்ல அவனது ஜனங்களும் அவனைப்போல்தான் இருந்தார்கள். அந்தளவுக்கும் மனாசே அவர்களை மாற்றி இருந்தானென்றால் கூட தப்பில்லைதான். அன்பானவர்களே, நமக்குக் கிடைக்கும் வெற்றிகள், உதவிகள் போன்றவை நாம் கர்த்தரின் சத்தியத்துக்கு செவிமடுக்காதபடி தடையாக இருக்கக்கூடாது. வேதாகமம் சொல்லுகிறது என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன் என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனயீனப்படுவார்கள் என்பதாக. எந்தச் சூழ்நிலையிலும் நாம் கர்த்தரின் சத்தியத்தை அண்டிக்கொள்ளுவோம்

