download (10)

யோசேப்பு வெற்றி பெற்ற ஐந்து சோதனைகள்

நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்களிடத்தில் அதிகமாய் பெருகுவதாக, இந்த நாளிலும் யோசேப்பு தன்னுடைய வாழ்வில் பரிசுத்தத்தை காத்துக்கொண்ட ஐந்து வகையான சந்தர்ப்பங்களைக் குறித்து நாங்கள் ஆராய்ந்து பார்க்கலாம். அல்லது அவர் வெற்றி கொண்ட சோதனைகள் ஐந்தினை இந்த நாளிலே சுருக்கமாக நாங்கள் தியானித்து பார்க்கலாம்.

பல நேரங்களிலே கிறிஸ்தவர்களாக நாங்களும் கடந்து செல்லுகிற பாதைகளிலே பலவிதமான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த மாதிரியான சோதனைகளுக்கூடாகவும் நாங்கள் கடந்து செல்ல வேண்டிய சூழல்கள் எங்களுக்கும் ஏற்படலாம். அவ்வாறான சூழல்களில் நாங்கள் தைரியமாக முகம் கொண்டு வெற்றி பெற்று பரிசுத்தத்தை காத்துக்கொண்டு கிறிஸ்துவுக்குள்ளாய் தொடர்ந்து நாங்கள் முன்னேறிச் செல்லுவோம். கர்த்தர் நம்மை நிச்சயமாக ஆசீர்வதிப்பாராக.

முதலாவதாக, யோசேப்பு எதிர்கொண்ட சோதனை என்னவென்று சொன்னால் ஆதியாகமம் 37.4,5,11வது வசனங்களை வாசிப்போம். ஆதி 37:4 அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.ஆதி 37:5 யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.ஆதி 37:11 அவன் சகோதரர் அவன் மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான்.யோசேப்பின் சொந்த சகோதரர் அவனை அதிகமாய் பகைத்தனர், அதிகமாதிகமாய் அவனை பகைத்து, அதிகமாய் பொறாமை கொண்டனர் . சில நேரங்களில் எதிர்ப்பு நடவடிக்கையில் கூட அவர்கள் ஈடுப்பட்டதாக நாங்கள் வாசிக்கிறோம்.

அருமையானவர்களே, பகைமைகள், எதிர்ப்புகள், பொறாமைகள் நடுவில் தன்னுடைய பரிசுத்தத்தை காத்துக்கொண்டு வாழ்ந்தது தான் முதலாவது காரியம். எம்மை நேசிக்கும், எம்மை ஆதரிக்கும், அன்புகூரும் மனிதர்கள் மத்தியில் நாம் இலகுவாக வாழ்ந்து விட முடியும். ஆனால் எதிர்ப்புகள், பகைமைகள் மத்தியில் பரிசுத்தமாய் வாழ்வது என்பது அவ்வளவு இலகுவான காரியம் இல்லை. ஆனால் யோசேப்பு இத்தனை எதிர்ப்புகள், பகைமைகள் மத்திலும் அவர் தன்னுடைய பரிசுத்தத்தில் உறுதியாக இருந்தார். வெளியில் உள்ள மக்கள், எமக்கு அறிமுகமே இல்லாத மக்கள் எம்மை பகைக்கும்போது அல்லது எமக்கு தேவையே இல்லாத ஒருவர் எம்மை பகைக்கும்போது, நாம் அதிகம் அறியப்படாத மக்கள் எம்மை பகைக்கும்போது ஒருவேளை நாங்கள் அதை ஜெயித்து விடலாம்; அதை நாங்கள் சமாளித்து பரிசுத்தத்தைக் காத்துக்கொண்டு வாழ்ந்து விட முடியும். ஆனால் சொந்த சகோதரர்களே மிக அதிகமாய் பகைக்கும் போது நாம் என்ன தான் செய்ய முடியும். யோசேப்பை அவன் சகோதரர்கள் பகைக்கும் அளவுக்கு யோசேப்பு எந்த பிழையான விடயத்தையுமே செய்யவில்லை. முகாந்தரம் இல்லாமலேயே அவனைப் பகைத்தார்கள்.

அன்பானவர்களே, உங்கள் வாழ்விலும் உங்கள் நண்பர்கள் , சிநேகிதர்கள் சகோதரர்கள் காரணம் இன்றி உங்களைப் பகைக்கலாம், ஆனால் அதன் மத்தியில் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது. சரியானதைப் பிழையாகப் பேசலாம், ஒன்று இரண்டு காரியங்களைக் கூட்டிப் பேசலாம், செய்யாததைச் செய்ததாகக்கூடச் சொல்லிவிடலாம், எல்லாருமே ஒன்று சேர்ந்துகூட எங்களை எதிர்க்கலாம்; யார்தான் எப்படித்தான் எதிர்த்தாலும் அங்கே, அதன் மத்தியிலும் எங்களது நடத்தைகள், எங்களது பேச்சுகள், எங்களது சிந்தனைகள் பரிசுத்தம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதை ஆண்டவராகிய தேவன் எப்போதும் எங்களுடைய வாழ்க்கையிலே அவர் எதிர்பார்க்கிறவராக இருக்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை முகாந்திரம் எதுவும் இன்றியே பகைத்தனர், எதிர்த்தனர். ஆனால் இவற்றுக்கு மத்தியில் தான் இயேசு கிறிஸ்துவும் சமாதானமாய் பரிசுத்தமாய் வாழ்ந்தார். இப்படியான சூழ்நிலைகளில் தேவ பிள்ளைகளாய் நடந்து அமைதியாய் இருந்து ஆண்டவரிடம் எல்லாவற்றையும் ஒப்புகொடுத்து பரிசுத்தமாய் எம்மை காத்துக் கொண்டு வாழ்வோமாக.

இரண்டாவது ஆதியாகமம் 37.23,24 வது வசனங்களை வாசிப்போம். 23 – யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி,24 – அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது.தங்களில் ஒருவனாக அவனை கருதாமல் அவனை தூக்கி எறிந்து விட்டதை நாங்கள் பார்க்கலாம்.

அருமையானவர்களே, குழிக்குள் போடப்படும் அல்லது கழட்டி வீசப்படுகிற அல்லது விற்கப்படுகிற அல்லது தள்ளப்படுகிற அனுபவங்களில் பரிசுத்தத்தை காத்துக்கொண்டு வாழ்ந்து தான் இரண்டாவது காரியமாகும். நன்மை செய்யச் சென்ற யோசேப்பை அவனது சொந்த சகோதரர்கள் தூக்கி குழிக்குள் போட்டனர். சாதரண வெள்ளிக் காசுக்காக விற்பனை செய்வது எவ்வளவு ஒரு கொடூரமான காரியமாகும். இத்தனைக்கு மத்தியிலும் யோசேப்பு பரிசுத்தமாகவே தான் இருந்தார். அவரது வாழ்வில் எதுவித கறையுமே இருக்கவில்லை.

உங்கள் வாழ்விலும் நீங்கள் பல நன்மைகளை ஒருவருக்கு செய்திருக்கலாம், எதுவித கபடான சிந்தனைகளும் இன்றி உண்மையான உதவிகளை அளித்திருக்கலாம். ஆனால் அவை எதையுமே கருத்தில் கொள்ளாது உங்களை கழட்டி விட்டிருக்கலாம் அல்லது தூக்கி எறிந்திருக்கலாம் அல்லது குழிக்கில் போட்டிருக்கலாம் அல்லது தள்ளப்பட்டிருக்கலாம். அருமையானவர்களே உங்களைப் பற்றி தவறாக பேசுவது கூட உங்களை விற்பனை செய்யும் செயலுக்கு ஒத்ததான ஒரு செயல்தான். தரிசனம் உள்ள மனிதர்கள் தள்ளப்படலாம், தூக்கி எறியப்படலாம், குழிக்கில் போடப்படலாம், பல விமர்சனங்களினால் கூட விலை போகலாம். இதற்கு மத்தியில் சமாதனமாய் பரிசுத்தமாய் எங்களால் வாழ முடியுமானால் நாங்கள் பாக்கியவன்களாகவே இருப்போம்.

அன்பானவர்களே, நீங்கள் நன்மை செய்துபாடு அனுபவிக்கும்போது அதைப் பாக்கியமாகவே கருதவேண்டும். இதனைப் போன்ற சந்தர்ப்ப சூழல்கள் உங்களுக்கும் அதிகமாக வந்திருக்கலாம் நாம் எந்த விதமான எதிர்ப்பிலும் ஈடுபடவே கூடாது. அந்த வேளைகளில் எமது நடத்தை, பேச்சு, சிந்தனை தூய்மையானதாகவே இருக்க வேண்டும். ஏற்ற நேரத்தில் தேவன் எங்களை உயர்த்தும் படிக்கு அவருடைய பலத்த கரங்களுக்குள் நாங்கள் அடங்கி இருக்க வேண்டும். ஒருவேளை இது போன்ற அனுபவத்தை நாம் பெற்றிருக்க முடியும்; அவ் வேளைகளில் நாம் எவ்வாறு செயற்பட்டிருக்குறோம்?. எங்களை ஆராய்ந்து பார்த்து சீர் செய்து கொண்டு எங்கள் பரிசுத்தத்தை காத்துக் கொண்டு தொடர்ச்சியாக அவருக்குள் நாங்கள் வாழுவோம்.

மூன்றாவதாக, ஆதியாகமம் 39:7,10, 12 வது வசனங்கள் 7- சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்.10 – அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.12 – அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.

இப்பொழுது யோசேப்பு போத்திபார் என்ற எகிப்தின் பிரதானி ஒருவரின் வீட்டில் விசாரணைக்காரனாக இருக்கிறார். ஓரளவுக்கு அவருடைய வாழ்வில் நிம்மதி என்று தான் சொல்ல வேண்டும். அவருக்குத் தேவையான அத்தனையும் அங்கு இருந்தது. அங்கே அவர் ஒரு பெரியவராகத்தான் இருந்திருக்கிறார். எதுவித குறையும் இன்றி செழிப்பாகத்தான் இங்கு யோசேப்பு இருந்ததாக நாங்கள் கருத முடியும். அவரும் அவருடைய பணியில் மிகவும் கவனமாகத்தான் இருந்தார். ஆனால் போத்திபாரின் மனைவி அவனை ஒரு தகாத உறவுக்காக அழைக்கிறாள். நித்தமும் இவ்வாறு அழைத்தவள் ஒரு நாள் கிரியைகளில் இறங்கியே விட்டாள். ஆனால் தனது வஸ்திரத்தை யோசேப்பு அவள் கையிலே விட்டு வெளியே ஓடி தன்னுடைய பரிசுத்தத்தை அவர் காத்துக்கொண்டார்.

சௌகரியங்கள் ஆசீர்வாதங்கள் மத்தியில் வரும் இச்சைகளுக்கு விலகி தன்னுடைய சரீரத்தை பரிசுத்தமாய் காத்துக்கொண்டது தான் மூன்றாவது காரியமாகும். சரீர ஆசை இச்சைகளில் பாவ உணர்வுக்கு அவர் இடம் கொடுக்கவே இல்லை. சரீரத்தில் தேவையில்லாத ஆசை இச்சைகளை உண்டாக்கி பிசாசு எம்மை பாவம் செய்ய தூண்டுவான். அது ஒருவேளை பாலியல் காரியமாக இருக்கலாம், இல்லையென்றால் பொருள் ஆசையாகக்கூட இருக்கலாம் அல்லது பண ஆசையாக இருக்கலாம் அல்லது பதவி ஆசையாகக்கூட இருக்கலாம் அல்லது ஒரு சாப்பாட்டு ஆசையாகக்கூட எங்களுக்கு இருக்கலாம். இது போன்ற இச்சையான காரியங்களுக்கு விலகி ஓடி எம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எமது நடத்தைகள் சிந்தனைகள் தூய்மையாகவே இருக்க வேண்டும். ஒருவேளை பாவத்தில் யோசேப்பு வீழ்ந்திருந்தால் அவரது எதிர்கால வாழ்வு வளமாக அமையாது கூட போயிருக்கலாம். அதாவது எகிப்தின் அதிகாரியாக அவர் வராமல் கூட இருந்திருக்கலாம். அல்லது தேவ தரிசனம் நிறைவேற முடியாத ஒரு பாத்திரமாக கூட விளங்கி இருக்கலாம். பவுல் சொல்வது போல என்னுடைய சரீரத்தை ஒடுக்கி கீழ்ப்படுத்துக்கிறேன் என்கிற வார்த்தையின்படி என்னுடைய சரீரத்தை அடக்கி உலக, ஆபாச காரியங்கள், ஆசை, இச்சைகளுக்கு விலகி வாழ்வை பரிசுத்தமாய் காத்துக் கொண்டு பரிசுத்தமாகவே தொடந்தும் ஜீவிப்போமாக.

நான்காவதாக ஆதியாகமம் 39; 20 யோசேப்பின் எஜமான் அவனைப்பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.இப்பொழுது யோசேப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கின்றார்.

பாவத்துக்கு விலகி ஓடியதினால் கிடைத்த பரிசு தான் அது. பொய்யாய் குற்றஞ்சாட்டப்பட்டு அநீதியான முறையில் சிறைத் தண்டனை அவருக்கு கிடைத்தது. சிறை என்பது ஒரு செயப்பட முடியாத நிலை அதாவது சுதந்திரமற்ற நிலை, கட்டப்பட்ட ஒரு நிலை அல்லது ஒரு தண்டனைக்குரிய ஒரு நிலை அல்லது அடிமை என்று சொல்லக்கூடிய ஒரு நிலை. இதற்குள் வாழும் போது ஒருவரால் பரிசுத்தமாய் இருக்க முடியுமா? ஆனால் அருமையானவர்களே, யோசேப்பு பரிசுத்தமாய் தான் தன் வாழ்வை அங்கேயும் காத்துக்கொண்டார். ஆகவே கட்டுகள் செயல்பட முடியாத நிலைமைகளின் போது பரிசுத்தத்தை காத்துக்கொண்டு வாழ்வதுதான் நான்காவது காரியமாகும்.

சிலவேளைகளில் நம்முடைய வாழ்வும் இப்படித்தான் நன்றாய் ஓடித்திரிந்து, சுகமாய், சுதந்திரமாய் பல காரியங்களை செய்த நாம் சில வேளைகளில் சிறைப்பட்டு, முடக்கப்பட்டு எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலை ஏற்படுகிறது. இந்த நிலையிலும் கூட நமது பரிசுத்தத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பரிசுத்த வேதாகமத்தில் யோபு என்கிற ஒரு தேவ மனிதன் கூட இப்படித்தான் ஆனால் அவரில் எவ்வளவு வேணும் பாவமே இருக்கவில்லை. அவர் சிந்தனையில் கூட பாவம் செய்யவே இல்லை. அவர் தன்னுடைய வாயின் வார்த்தையில் கூட தவறு விடவில்லை. அப்போஸ்தலனாகிய பேதுரு, பவுல் போன்றவர்கள் கூட தங்களுடைய வாழ்வில் சிறை வாழ்வுகளை அனுபவித்தவர்கள் தான் ஆனால் அவர்கள் அங்கிருந்து கூட கர்த்தரை பாடி துதித்து தேவனை மகிமைப்படுத்தி பரிசுத்தமாகவே தங்களுடைய வாழ்க்கை காத்துக் கொண்டு வாழ்ந்தனர்.

சில வியாதிகள், சில பலவீனங்கள் எங்களை ஒரு சிறையாக சில நேரங்களில் பிடித்திருக்க முடியும்; ஆனால் சோர்ந்து போகக்கூடாது, பெலன் இழந்து போகக்கூடாது, கர்த்தரை தூசித்து விடக்கூடாது. அங்கேயும் பரிசுத்தமாய் எங்களுடைய வாழ்வை காத்துக்கொண்டு பரிசுத்தமாகவே ஜீவிப்போமாக! ஆனால் அவர்கள் அங்கிருந்தும் கூடகத்தரை பாடி துதித்துதேவனை மகிமைப்படுத்திபரிசுத்தமாகவே தன்னுடிய வாழ்க்கையைகாத்துக்கொண்டு வாழ்ந்தனர்சில வியாதிகள் சில பெலவினங்கள்எங்களை ஒரு சிறையாக சில நேரங்களைபிடித்திருக்க முடியும்ஆனால் சோந்து போகக்கூடாதுபெலனெலந்து போகக்கூடாது கத்தரை தூசித்து விடக்கூடாதுஅங்கே பரிசுத்தமாய்எங்களுடிய வாழ்வை காத்துக்கொண்டுபரிசுத்தமாகவே ஜீவிப்போமாக!!

ஐந்தாவதாக யோசேப்பு எதிர்கொண்டு வெற்றி பெற்ற சோதனை என்னவென்று சொன்னால் ஆதியாகமம் 41 வது அதிகாரம் 43 வசனம் தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்இப்பொழுது யோசேப்பு அரியணையில் அமர்ந்துவிட்டார். அவர் ராஜாவுக்கு அடுத்தபடியாக உயர்ந்துவிட்டார்.

எவ்வளவு தான் உயர்வுகள், மேன்மைகள் ஒருவருக்கு கிடைத்தாலும் அதற்கு மத்தியிலும் பரிசுத்தமாய் வாழ ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும். உயர்வுகள் மேன்மைகள் மத்தியில் பரிசுத்தத்தை காத்துக் கொண்டு வாழ்வதுதான் ஐந்தாவது காரியமாகும். வேதாகமத்தில், பல்வேறு ராஜாக்கள் தங்களுடைய உயர்வுகள், மேன்மைகளின் போது கர்த்தரை விட்டு விலகி, ஆண்டவருக்கு முரணான காரியங்களை செய்து, பல்வேறு பாவ செயல்களில் ஈடுபட்டு, அநியாயமான வழிகளில் நடந்து, பல்வேறு குற்ற செயல்களை செய்து வாழ்ந்து இருந்ததை நாம் அவர்களது சரிதையில் படிக்கிற போது கண்டுகொள்ள முடியும். ஆனால் தேவனுடைய பிள்ளைகளாய் எத்தனை தான் உயர்வுகள் நமக்கு கிடைத்தாலும் எவ்வளவுதான் ஆசீர்வாதங்கள் நம்முடைய வாழ்க்கையில் வந்தாலும், எத்தனை தான் மேன்மைகள் நம்முடைய வாழ்க்கையில் கிடைத்தாலும் நாம் பரிசுத்தமாய் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். பரிசுத்தமாகவே ஜீவிக்க வேண்டும் !! நம்மை அழைத்த தேவன் பரிசுத்தராய் இருப்பது போல, நாமும் நமது நடக்கைகள் எல்லாவற்றிலும் பரிசுத்தமாய் ஜீவிப்போம் !!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *