நல்ல ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நல்ல நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!!!
மனிதர்களாக நாம் பல முயற்சிகளை பல்வேறு விடயங்களிலே முயற்சித்து சில நேரங்களில் அவற்றில் தோற்றுப் போவது சாதாரணமான ஒரு காரியம். ஆனால் சர்வ வல்லமை உள்ள தேவனாகிய கர்த்தர் தோற்றுப் போவாரா? அதுவும் பல தடவைகள் முயற்சித்து தோல்வியை சந்திப்பாரா? என்கின்ற வினாக்களுக்கு இன்றைக்கு நாம் பதில் காணப் போகின்றோம்.
2 நாளாகமம் 28 வது அதிகாரம் ஆகாஸ் என்கின்ற எருசலேம் ராஜாவின் வாழ்க்கை சரிதையை குறிப்பிடுகிறது. இந்த ராஜா கர்த்தருக்கு விரோதமான காரியங்களை செய்து கொண்டிருந்தான். மிகவும் பொல்லாப்பான காரியங்களையும் செயல்களையும் செய்து கர்த்தருக்கு கோபம் உண்டாக்க மிகுதியான அருவருப்புகளை செய்து கொண்டிருந்தார்.
அன்பானவர்களே இவனைப்போல இன்று நாமும் கர்த்தரை நேசிப்பவர்களாக இருக்கிறோமா அல்லது கர்த்தரை விட்டு விலகி கர்த்தருக்கு விரோதமான காரியங்களை செய்து அவரது பார்வைக்கு துன்மார்க்கமாய் நடந்து கொண்டிருக்கிறோமா? நாம் கர்த்தருக்கு செம்மையான வழிகளில் நடக்க நம்மை அர்ப்பணிப்போமா!!
தேவனின் முதல் முயற்சி – சீரியா
2 நாளாகமம் 28:5 ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார். அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டு போனார்கள்.
இங்கு எதற்காக தேவன் சீரியா ராஜாவின் கையில் ஆகாஸ் ராஜாவை ஒப்பு கொடுக்க வேண்டும்? அவன் இவனை முறியடித்து இவனுக்கு இருந்தவர்களிலே பெரிய கூட்டத்தினரை தமஸ்குவுக்கு அழைத்துக் கொண்டு போவதற்கு ஏன் தேவன் அனுமதிக்க வேண்டும்?
இப்படிப்பட்ட ஒரு நெருக்கடி வேளையிலாவது அவன் தன்னுடைய தேவனாகிய கர்த்தரண்டை திரும்புவான் என்கின்றதான ஒரு எதிர்பார்ப்போடு தேவன் இவ்வாறு செய்தார். பொதுவாகவே மனிதர்கள் தங்களுடைய நெருக்கத்திலும் இக்கட்டிலும் உண்மையாகவே கர்த்தரண்டை திரும்புகின்றதான ஒரு மனநிலையை கொண்டு இருப்பார்கள்.
ஆகாஸிடம் இருந்தவர்களிலேயே பெரிதான ஒரு கூட்டம் சிறைபிடிக்கப்பட்டு கொண்டு போகப்படுகிறது. அவனுக்கு இருந்த பெரிய கூட்டம் இல்லாமல் போனதினால் அவன் சோர்வடைந்திருப்பான். அவனுக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கும். எதிர்காலத்தை குறித்து நிச்சயம் இல்லாமல் இருந்திருக்கும். இப்படி இருக்கும்போது ஒரு மனிதன் கடைசியில் தேவனண்டை மனம் திரும்பக் கூடிய வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கும்.
ஆனால் ஆகாஷ் ராஜாவை பொறுத்தவரை அவர் இன்னும் தன்னுடைய வழிகளை கெடுத்துக்கொண்டு மேலும் மேலும் தேவனுக்கு எதிராக காரியங்களை செய்கிறவராக இருந்தாரே தவிர அவர் ஒருபோதும் மனம் திரும்ப தயாராக இருக்கவில்லை. உண்மையில் இந்த இடத்தில் தேவன் எடுத்துக்கொண்ட முதல் முயற்சி தோல்வி அடைந்திருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் சில நெருக்கங்களையும் சில இக்கட்டுகளையும் நமக்கு அனுமதிக்க கூடும். ஏனென்றால் நாம் மனம் திரும்பி தேவண்டை இன்னும் அதிகமாக கிட்ட சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தேவன் அவ்வாறு அனுமதிக்க கூடும். ஆனால் நாம் தேவனின் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுகிறவர்களாக இருக்கிறோமா? இல்லையென்றால் இன்னும் அவரை விட்டு விலகி தேவனுக்கு விரோதமான காரியங்களை நடத்துகிறவர்களாக இருக்கின்றோமா?.
தேவனின் இரண்டாம் முயற்சி – இஸ்ரவேல்
2 நாளாகமம் 28:5 அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான்.
இந்த யூதாவின் ராஜாவாகிய ஆகாஸ் இஸ்ரவேல் ராஜாவினுடைய கையிலும் இப்பொழுது ஒப்புக்கொடுக்கப்படுகிறான். அவனும் இவனை நன்றாய் முறியடிக்கின்றான். உண்மையில் இந்த இஸ்ரவேல் என்பது இவர்களுடைய சகோதரர்கள் ஆவார்கள். ஆகவே இப்பொழுது சகோதரர்களினாலும் தோல்வியையும் அவமானத்தையும் மிகுந்த நெருக்கடிகளையும் இந்த ஆகாஸ் ராஜா சந்திப்பதற்கு தேவன் அனுமதிக்கின்றார்.
சொந்த சகோதரர்களிடமிருந்து எதிர்ப்புகளையும் பகைமைகளையும் ஒரு மனிதன் சந்திக்கும் போது நிச்சயமாக அவன் ஒருவேளை தன்னுடைய தேவனாகிய கர்த்தரண்டை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனால் இது போன்ற சூழ்நிலைக்குள்ளாய் ஆகாஸ் ராஜா நடத்தப்பட்டாலும் அவர் தேவனண்டை வருவதற்கு தயாராக ஒருபோதும் இருக்கவே இல்லை.
புற மனிதர்களை, அதாவது வெளி மனிதர்களை விட சொந்த சகோதரர்களே ஒரு மனிதனை எதிர்ப்பது மிகவும் வேதனைக்குரிய செயலாக அமையும். சகோதரன் என்பவன் தன் சகோதரனுக்காக ஜீவனை கொடுக்கவும் அவனுக்கு ஆபத்தில் உதவி செய்யவும் நிச்சயமாக பொழுதும் தயாராக இருப்பான். ஆனால் இங்கே எதிர்ப்புகளை சந்தித்து கொண்டு இருந்த இந்த ஆகாஸ் தேவனண்டை திரும்ப வேண்டும் என்ற ஒரு மனநிலையை கொண்டிருக்கவே இல்லை.
உண்மையில் ஆகாஸை மனம் திரும்ப செய்ய வேண்டும் என்பதற்காக தேவன் மேற்கொண்ட இந்த இரண்டாவது முயற்சியும் தோல்வியிலேயே முடிவடைகிறது. ஆகாஸ் இன்னும் இன்னும் தன்னுடைய வழிகளிலேயே உறுதியாக நடந்து கொண்டார் அவர் தன்னை திருத்திக் கொள்ள ஒரு போதும் முன் வரவே இல்லை.
அன்பானவர்களே!! சில வேளைகளில் நாம் நம்முடைய சொந்த சகோதரர்களால் சில எதிர்ப்புகளையும் பகைமைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நம்மை நாம் ஆராய்ந்து பார்த்து தேவனண்டை நெருங்கி சேர தயாராக இருக்க வேண்டும். எப்பொழுதும் எம்மை ஆராய்ந்து பார்ப்பது நன்றாக இருக்கும். அப்படி ஆராய்ந்து பார்த்து நாம் தேவனின் பக்கம் திரும்ப ஆவலோடு காத்திருக்க வேண்டும்.
தேவனின் மூன்றாவது முயற்சி – ஏதோம்
2 நாளாகமம் 28:17 ஏதோமியரும் கூடவந்து, யூதாவை முறிய அடித்து, சிலரைச் சிறைபிடித்துப்போயிருந்தார்கள்.
இங்கே ஏதோமியரும் ஆகாஸ் ராஜாவை முறியடித்து சிலரை சிறை பிடித்து போயிருந்ததாக நாம் வாசிக்கின்றோம். உண்மையில் ஏதோமியர்கள் என்று சொல்லப்படுகிற ஒரு கூட்டத்தினர் அவ்வளவு பெரிதான ஓர் கூட்டத்தினர் என்று நாம் சொல்ல முடியாது. அதாவது அவ்வளவு பலம் மிக்க படையை கொண்ட எதிராளிகள் என்று நாம் காண முடியாது. இவர்கள் பல வேலைகளில் அடிமைகளாக கூட இருந்திருக்கின்றார்கள்.
இந்த ஏதோமியர் உண்மையில் ஏசா வம்சத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கூட யூதாவின் உறவினர்கள் என்று கூட நாம் இவர்களை கருத முடியும். இப்படி இருக்கிற பொழுது அவர்களும் ஆகாஸ் ராஜாவை முறியடித்தார்கள்; இதற்கும் தேவன் அனுமதித்தார் என்பதை நாம் மறந்து போகக்கூடாது.
இவ்வாறு இந்த சிறிய படை வந்து இப்பொழுது யூதாவை மேற்கொள்ளுகிறது. இவ்வாறு சிறிய ஒரு கூட்டத்தினரிடமும் அதேபோல தங்கள் உறவினர்களுமாக இருந்த ஒரு படையிடம் இவர்கள் தோல்வியை சந்திக்கும் பொழுது நிச்சயமாக தங்களின் நிலைமையை புரிந்து கொண்டு ஆகாஸ் ராஜா தேவனண்டை மனந்திடும்பக் கூடும் என நிச்சயமாக தேவன் எதிர்பார்த்திருக்கலாம்.
ஆனால் தன்னுடைய வழியிலேயே ஆகாஸ் உறுதியாக நிலைத்திருந்தார் அவர் தேவனண்டை திரும்ப வேண்டும் என்று ஒரு போதும் நினைக்கவே இல்லை. தனக்கு பிடித்த வழிகளில் நடப்பதில் அவர் சந்தோஷம் அடைந்தார். உண்மையில் தேவனுடைய இந்த மூன்றாவது முயற்சியும் தோல்வி அடைந்தது என்பதே வேதனையான காரியம்.
அன்பானவர்களே!! நமது உறவுகளாலும் நம்மை விட பலம் குறைந்த சில காரியங்களினாலும் நாம் நெருக்கடிகளையும் வேதனைகளையும் இக்கட்டுகளையும் சந்திக்கின்ற நேரங்களில் நாம் நம்மை நிதானித்து ஆராய்ந்து தேவனின் பக்கம் மனந்திரும்ப ஆயத்தமாக இருக்க வேண்டும்.
தேவனின் நான்காவது முயற்சி – பெலிஸ்தர்
2 நாளாகமம் 28:18 பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட்டணங்களின்மேல் விழுந்து, பெத்ஷிமேசையும், ஆயலோனையும், கெதெரோத்தையும், சொக்கோவையும் அதின் கிராமங்களையும், திம்னாவையும் அதின் கிராமங்களையும், கிம்சோவையும் அதின் கிராமங்களையும் பிடித்து அங்கே குடியேறினார்கள்.
இங்கே பெலிஸ்தர்களினாலும் ஆகாஸ் ராஜா முறியடிக்கப்படுகிறார். அவர்கள் இவனுடைய சில கிராமங்களை கைப்பற்றி அங்கே குடியேறுகிறார்கள். இந்த பெலிஸ்தர்கள் பெரும்பாலும் இஸ்ரவேலராலும் யூதா ராஜாக்களினாலும் தோற்கடிக்கப்பட்ட வரலாறுகளே அதிகம். இவர்கள் யூதாவுக்கு மிக அருகில் இருந்தவர்கள். அயலிலே வசித்தவர்கள். இவர்களையும் தேவன் ஆகாஸிற்கு விரோதமாக பயன்படுத்தினார்.
அடிக்கடி வெற்றிகளை பெற்றுக் கொண்ட ஓர் அணிக்கு எதிராக தோல்வியை அடையும் போது ஒருவன் தன்னைத்தான் ஆராய்ந்து பார்த்து மனம் திரும்பக் கூடிய வாய்ப்புகள் உருவாகலாம். அயலில் உள்ள ஒருவனால் அல்லது பக்கத்தில் உள்ள மனிதனாலும் ஒருவன் பாடுபடும் போது வேறு வழி இல்லை என்று கர்த்தரண்டை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
ஆனால் ஆகாஸ் ராஜாவை பொறுத்தவரை இப்படிப்பட்ட மிகுந்த நெருக்கடிக்குள்ளாக அவர் கடந்த சென்றபோதும் கர்த்தரண்டை மனம் திரும்ப விருப்பமற்றவராகவே இருந்தார். அவர் மேலும் மேலும் விக்கிரக வழிபாடுகளை செய்து கொண்டும் விக்கிரக தெய்வங்களுக்கு பலிபீடங்களை யூதாவின் மேலும் பல இடங்களில் நிலைநிறுத்தியும் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டே இருந்தார்.
அருமையானவர்களே!! சில வேளைகளில் நாம் நமது அயலாகத்தரால் அல்லது நமது பக்கத்து உறவுகளால் அதிகமான நெருக்கத்தையும் பாதிப்புகளையும் நம்முடைய வாழ்க்கையிலே அடைய நேரிடலாம். இல்லையென்றால் நாம் நம்மை விட அறிவில் குறைந்த, வசதியில் குறைந்த, பலத்தில் குறைந்த, ஞானத்தில் குறைந்த ஒரு மனிதனிடம் தோல்வி அடைந்து நெருக்கத்தையும் இலச்சையையும் அதனால் அடைய வேண்டி வரலாம். இப்படி இருக்கிற பொழுது நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து நாம் தேவனண்டை மனம் திரும்புகிறவர்களாக இருக்கின்றோமா? அல்லது தவறுக்கு மேல் தவறுகளை செய்து இன்னும் தேவனை விட்டு வழி விலகி தேவனுக்கு தூரமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா?.
தேவனின் ஐந்தாவது முயற்சி – அசீரியா
2 நாளாகமம் 28: 20 அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.
இந்த வசனப்பகுதியில் அசீரியாவின் ராஜாவும் யூதாவின் ராஜாவாகிய ஆகாஸை இன்னும் அதிகமாக நெருக்குகிறான். உண்மையில் ஆகாஸ் உதவிக்காக தான் அவனை அழைத்து இருந்தான். ஆனால் அவனும் இவனுக்கு எதிரியாக மாறி பல நெருக்கத்துக்குள்ளாக நடத்தும் படி தேவனே அவனுக்கு அதனை அனுமதித்தார்.
அந்த நாட்களில் அசீரியர்கள் சற்று பலம் பொருந்தின படையை கொண்டு இருந்தார்கள். மிகவும் வல்லமை பொருந்தின காரியங்களை செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அந்த காலங்களில் இருந்தவர்களுக்குள் ஒரு வல்லரசான தேசமாக நாம் இவர்களை எடுத்துக் கொள்ள முடியும்.
இப்படிப்பட்ட மிகப் பெரிய ஒரு தேசத்தை கொண்டு தேவன் ஆகாசை மிகுந்த நெருக்கடிக்குள்ளாக அனுமதிக்கின்றார். உதவி செய்ய அழைத்தவனே உபத்திரப்படுத்துகிறவனாக மாறி இருந்தான். எப்படிப்பட்ட நெருக்கத்துக்குள்ளாக ஆகாஸ் ராஜா சென்றாலும் கொஞ்சம் கூட மனம் திரும்ப மனம் அற்றவனாகவே ஜீவித்தான்.
இங்கும் தேவன் பயன்படுத்திய உத்தி தோல்வியே கண்டது. என்னென்ன வழிகளை கையாள முடியுமோ அத்தனை வழிகளையும் ஆண்டவர் கையாண்டிருந்தார். ஆனால் எதுவித மாற்றத்தையும் தன் வாழ்விலே காண்பிக்காத ஒரு மனிதனாகவே ஆகாஸ் விளங்கினார்.
அன்பானவர்களே நம்மை குறித்து நாம் என்ன சொல்லுவோம் மிகப்பெரியதான நெருக்கடிகளையும் இக்கட்டுகளையும் நாம் சந்தித்தாலும், நமக்கு உதவியாய் இருந்த மனிதர்கள் நமக்கு எதிரியாக மாறி நம்மை உதைத்து தள்ளினாலும் நம்முடைய வாழ்க்கையில் தேவனண்டை மனம் திரும்பின அனுபவம் நமக்கு உண்டா? நம்மை நாமே நிதானித்து நாம் பாவங்களை விட்டு மனந்தரும்பிய அனுபவத்தை பெற்றிருக்கிறோமா?
நம்மிடம் ஆண்டவர் தோல்வி அடைந்திருக்கிறாரா? நம்மை குறித்து அவர் குழப்பம் அடைந்திருக்கிறாரா? என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய மனம் குழம்பியபடி ஆண்டவர் நம்முடைய காரியங்களில் இருந்திருக்கிறாரா?
தேவனுடைய மனம் குளிரும்படியாய் அதாவது சந்தோசம் அடையும் படியாய் நம்முடைய வாழ்க்கையின் நோக்கங்கள் மாறுகிற பொழுது நிச்சயமாகவே நாம் நல்லதொரு தேவ மனிதர்களாக இந்த உலகத்தில் வாழ்வோம். அப்படி வாழ நாம் பிரயாசப்படுவோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.. ஆமென்!!
Recent Bible message
- எம்மில் சாந்தகுணம் இருக்கிறதா? மூன்று வழிகளில் அறியலாம் | Tamil Bible Latest Message| Great Light Church
- தவிர்த்து கொள்ள வேண்டிய ஐந்து சுபாவங்கள் | ஆகாப் ராஜாவின் சரிதை | Tamil Bible Latest Message| Bible Sermon
- நமது ஆலயத்தை கட்ட முடியாத படி ஏற்படும் ஐந்து தடைகள் | Tamil Bible Latest Message| Bible Sermon
- தேவனின் ஐந்து முயற்சிகளும் தோற்றுப் போன வரலாறும் படிப்பினைகளும் / Tamil Bible Message/ Bible sermon/ latest bible message
- உயர்வுக்கு ஆண்டவர் எதிர்பார்க்கும் மூன்று தகுதிகள்// Tamil Bible Message// Tamil Christian Bible study notes // bible sermon
Recent English Message
- Three Signs of Meekness| The power of Gentleness in the Bible| English Bible latest message
- Obedience and repentance message| Christian devotional message| king Ahab Bible lesson
- Obstacles in Rebuilding God’s Temple – Lessons from Ezra Chapter 4 | English Bible Sermon
- Five Temptations Joseph Overcame While Preserving Holiness | English Bible Latest message
- God’s Five Attempts – History of Failure and Spiritual Lessons / English Bible message
Latest post
- Double Quiz – 622 | Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Timing Quiz – 24 | Exodus 14 | Quiz from exodus| யாத்திராகமம் 14| Exodus Bible Quiz தமிழ் வேதாகம வினா
- Double Quiz – 621 | Twin Quiz | Tamil bible Quiz with answers for youth| இரட்டை கேள்வி | தமிழ் வேதாகம வினா
- Timing Quiz – 23 | Exodus 13 | Tamil Bible Quiz| Exodus Bible Quiz| Tamil Bible Quiz| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 620 | Twin Quiz| Bible Quiz competition – 2026 | Bible Games| Tamil Bible Quiz

