img 20260204 wa0000

தவிர்த்து கொள்ள வேண்டிய ஐந்து சுபாவங்கள் | ஆகாப் ராஜாவின் சரிதை | Tamil Bible Latest Message| Bible Sermon



ஓர் விக்கிரகாராதனைகாரனின் 5 சுபாவங்களை இந்த நாளிலே நாம் ஆராய்ந்து பார்த்துக் கொள்ளலாம். ஆகாப் என்கிறதான இஸ்வேலின் ராஜா இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக இருந்த போதிலும் அவர் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வழிபடுகிறவராக இல்லாமல் பாகால்களையும் ஏனைய விக்கிரகங்களையும் வழிபடுகிற ஓர் மனிதராகவே இருந்தார். அந்த ஆகாப் இராஜாவின் ஐந்து சுபாவங்களை தியானிப்போம்.





ஆகாப் இராஜா தனது அரண்மனையின் அருகே இருக்கும் ஓர் திராட்சை தோட்ட காணியை வாங்குவதற்கு நினைக்கிறார். அந்த காணியின் உரிமையாளராக நாபோத் இருக்கிறார். ஆகவே ஆகாப் நாபோத்துடன் பேசுகிறார். ஆனால் நாபோத்தின் பதிலை 1 இராஜாக்கள் 21:3 இல் நாம் வாசிக்கலாம்.



நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான். இந்த பதில் ஆகாப் இராஜாவை சலிப்படைய செய்தது. பணத்திற்காகவும் பதவிக்காகவும் எதையும் செய்ய துடிக்கும் உலகில் இப்படி ஓர் மனிதனா என அவனை வியப்படைய வைத்தது. பிதாக்களின் சுதந்திரத்தை கொடுக்க மறுத்த செயல் ஆகாப் இராஜாவின் ஆழ்மனதை இரண்டாக பிரித்து இருக்க வேண்டும்.



ஆகாப் இது போல சிந்தித்து இருக்க வாய்ப்பில்லை. அவர் அவ்வாறு சிந்தித்து இருந்தால் தன்னுடைய முற் பிதாக்களின் சுதந்திரத்தை கெடுத்திருக்க முன் வந்திருக்க மாட்டார். ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு ஆகிய தனது முற்பிதாக்களின் தேவனை மறந்து விக்கிரகங்களை நாட விரும்பியிருக்க மாட்டார். அவர் எவ்வளவாக தனது முற்பிதாக்களின் சுதந்திரத்தை கெடுத்து விட்டிருந்தார்.



சிலரின் பெற்றோர் தேவனுக்கு பயந்தவர்கள். தெய்வ பயம் உடையவர்கள். பக்தியில் சிறந்தவர்கள். விசுவாசத்தில் உறுதியானவர்கள். ஜெப வீரர்கள். வேதாகம வல்லுனர்கள். ஆனால் பிள்ளைகளோ தமது பிதாக்களின் சுதந்திரத்தை கெடுப்பவர்களாக அவர்களுக்கு நேர் மாறாக வாழ்பவர்களாக இருக்கின்றனர்.



காணி, கட்டடம், வாகனங்கள், மற்றும் சொத்துக்கள் ஆகியன உலக பிரகாரமான சுதந்திரங்கள் ஆகும். அவைகளை அழிக்கிற பிள்ளைகளும் இருக்கின்றனர். ஆனால் பெற்றோர்களால் வழங்கப்படும் முன்மாதிரியான நடத்தைகள், ஆன்மிக செயற்திட்டங்கள் ஆகியனவும் சுதந்திரங்கள் ஆகும்.



இவற்றை பணத்திற்காகவும் பதவிக்காகவும் கெடுத்து போடுகிற பிள்ளைகள் இருக்க தான் செய்கின்றனர். இன்று ஆலய ஆராதனைகளை பணத்திற்காக தூக்கி எறிந்து செல்பவர்கள் இருக்கின்றனர். பணத்திற்காக வேத வாசிப்பை நிறுத்தி, ஜெப வேளைகளை அற்பமாக நினைப்பவர்களும் இருக்கின்றனர்.



அன்பானவர்களே!! தன் பிதாக்களின் சுதந்திரத்தை கெடுக்க விரும்பாத நாபோத் போல நாம் வாழ்வோமா? அல்லது கெடுத்து போட்ட ஆகாப் இராஜாவை போல வாழ்கின்றோமா?



2 தீமோத்தேயு 5:2 அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.இங்கே விசுவாசம் எவ்வாறு தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு உள்ளது என்பதை நாம் கண்டு கொள்ள முடியும். இது போலவே தான் எமது முன்னோர்களின் நல் நடத்தைகள், நற்பண்புகள் போன்ற சுதந்தரங்களை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும்.





ஆகாப்பின் வேண்டுகோளுக்கு நாபோத் இவ்வாறு பதில் தருகிறார். 1 இராஜாக்கள் 21:3 நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான்.



தன்னுடைய பிதாக்களின் சுதந்திரத்தை தான் யாருக்காகவும் எதற்காகவும் விட்டு விட தயார் இல்லை என்பதாக நாபோத் கூறுகிறார். நாபோத், ஆகாப் இராஜாவிற்கு மிக அழகாகவும் அதே வேளை ஆழமாகவும் பதில் அளிக்கிறார். இந்த பதிலை சற்று சிந்தித்து தன் வழிகளை ஆகாப் இராஜா சீர் திருத்தி இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒருபோதும் அதை செய்ய முன்வரவில்லை.



இதன் போது மட்டுமல்ல இதற்கு முன்னைய சம்பவங்கள் கூட ஆகாப் தன்னை சரிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தான். எலியா மூலம் இடம்பெற்ற அற்புதங்களாக இருக்கட்டும் அல்லது அவரை எச்சரிக்கும் முகமாக இடம்பெற்ற சில தண்டனைகளாக இருக்கட்டும் ஆகாப் ஒருபோதும் கற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை.



ஆண்டவரே கர்த்தர் என் உறுதியாக கூறுமளவிற்கு ஆகாப் இராஜாவின் கண்களின் முன் பலத்த கிரியைகள் இடம்பெற்ற போதும் ஆகாப் ஒருபோதும் கற்றுக்கொள்ள முன்வரவில்லை. கற்றுக்கொள்ள தவறுபவர்கள் தவறிழைத்த வண்ணமே இருப்பார்கள். நாம் நமது வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். சீஷன் என்பவன் கற்றுக்கொள்பவனாக இருக்க வேண்டும்.



பெரிய தீர்க்கதரிசியாகிய எலியா போன்றவர்களை கொண்டும் தேவன் பேசுவார். சாதாரண திராட்சை தோட்டக்காரனான நாபோத் போன்றவர்களை கொண்டும் தேவன் பேசுவார். நாம் அன்றாடம் பழகும் மனிதர்களை கொண்டும், நாம் பார்க்கும் விடயங்களை கொண்டும் தேவன் நம்முடன் இடைப்பட வல்லவராக இருக்கிறார். நாம் தான் ஆயத்தமான மனநிலையை கொண்டிருக்க வேண்டும்.



தேவன் திரும்ப திரும்ப நம்மை எச்சரித்து சரியான வழியில் நம்மை கொண்டு சேர்க்க ஆவலோடு இருக்கிறார். நாம் தான் அதனை உணர்ந்து கொண்டு கற்றுக்கொள்ள ஆவலாக இருக்க வேண்டும். பிசாசு ஒரு போதும் கற்றுக்கொள்ள போவதில்லை. பிசாசினுடையவர்களும் ஒருபோதும் கற்றுக்கொள்ள முன்வருவதில்லை. கற்றுக்கொள்வது மாத்திரமல்ல கடைப்பிடிப்பதே முக்கியமானது என்பதை நாம் நன்றாக நினைவிற் கொள்ள வேண்டும்.





1 இராஜாக்கள் 21:4 இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய்த் தன் வீட்டிற்கு வந்து, போஜனம் பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.



நியாயமான பதிலைத்தான் நாபோத் ஆகாப் ராஜாவுக்கு வழங்கி இருந்தார். தன்னுடைய தவறை ஒத்துக் கொண்டு ஆகாப் ராஜா அதற்கேற்றாற் போல் தன்னை திருத்திக் கொண்டு நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் போஜனம் பண்ணாமல் சலிப்பும் சினமும் இருந்து தன் முகத்தை வேறுபடுத்திக் கொண்டு வித்தியாசமான செயற்பாட்டில் ஈடுபடுகிறார்.



இவ்வாறான ஒரு செயற்பாட்டின் விளைவாக அவருடைய மனைவி தவறான ஓர் முறையை கையாண்டு அவர் விரும்பிய அந்த காணியை அவருக்கு பெற்றுக் கொடுக்கின்றார்.



நாம் ஒன்றைப் பெறுவதற்கு தவறான வழியை கையாளுவது மிகவும் தப்பான விடயமாகும். எதையாவது நாம் பெற்றுக்கொள்ள அவசியம் இருந்தால் அதனை நேர்மையான வழியில் பெற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்பதனால் எப்படியாவது அதைப் பெற்றுக் கொள்ள ஏதோ ஒரு வழியை கையாள சிந்திப்பது மிகவும் ஆபத்தான காரியம் ஆகும்.



எரிச்சலும் சினமும் கோபமும் போஜனமின்மையும், ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் கையாளும் தந்திரமான காரியங்களாகும். சில நேரங்களில் சில சிறு பிள்ளைகள் தாம் விரும்புகின்ற ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு அடம் பிடித்து அழுது புரண்டு கோபித்து சாப்பிடாமல் இருந்து அதனை பெற்றுக் கொண்டு விடுவர். இதனைப் போல நாம் செயல்பட கூடாது.



நாம் தேவனிடமிருந்து சிலவற்றை பெற்றுக் கொள்வதற்கு அல்லது நாம் விரும்பின ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு கவலையுடன் அல்லது கோபத்துடனும் அல்லது எரிச்சலுடன் இருக்க முடியாது. அல்லது வேதாகமம் வாசிக்காமல், ஜெபம் செய்யாமல் கர்த்தருடைய ஆலய ஆராதனைகளுக்கு செல்லாமல் நாம் இருக்கக் கூடாது.



கர்த்தரை நாம் நம்முடைய வழியில் கொண்டு வருவதற்கு பிரியப்படக்கூடாது . எப்படியாவது என்ன செய்தாவது கர்த்தரிடத்திலிருந்து எதையோ பெற்றுக்கொள்ளலாம் என்கின்ற நம்பிக்கையில் நாம் தவறான வழிகளை கையாளக் கூடாது.





1 இராஜாக்கள் 21. 7 அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள்.



நாபோத்தின் காணியை எப்படியாவது உமக்கு தருவேன் என்று இங்கு யெசபேல் வாக்கு கொடுக்கிறார். ஆனால் எப்படி உன்னால் பெற்றுக் கொடுக்க முடியும்? என்ன வழியை கையாண்டு நீ இதை பெற்று தருவாய்? என்று ஆகாப் ஒரு போதும் தன்னுடைய மனைவியை கேட்கவில்லை. அவள் தவறு செய்யக்கூடிய வாய்ப்பு ஏதாவது இருக்கின்றதா என்று கூட ஆராய்ந்து பார்க்கவில்லை. என்ன செய்தாகிலும் தனக்கு காணி கிடைத்தால் சரி என்பது போல தான் இங்கு ராஜா செயல்படுகின்றார்.



மற்றவர்கள் தவறு செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும் என்று சொன்னால் நாம் அதை தவிர்த்துக் கொள்ளும்படி புத்தி கூற வேண்டும். நான் பிழை செய்யவில்லை, மற்றவர்கள் என்ன செய்தாலும் எனக்கு பரவாயில்லை என்று நாம் நடக்க முடியாது. நான் மாத்திரம் அல்ல நம்முடைய குடும்பமும் கர்த்தரை முழுமையாக சேவிக்கிறதாக இருக்க வேண்டும்.



மற்றவர்கள் செய்யும் பிழைகளுக்கு நாம் உடன்பட கூடாது. அந்த தவறுகளை நாம் தட்டிக் கொடுக்கவும் கூடாது. நம்முடையவர்கள் தவறு செய்ய போகிறார்கள் என்று நாம் உணர்ந்தால் நிச்சயமாக அந்த தவறை நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும். நம்மோடு கூட மற்றவர்களும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்வதற்கு நாம் அவர்களை பரிசுத்தமான வாழ்க்கைக்குள் உற்சாகப்படுத்த வேண்டுமே தவிர அவர்கள் பிழை விடக்கூடிய சந்தர்ப்பங்கள் வருகிற பொழுது நாம் அதனை உணர்த்தி சரியான வழிக்குள் வழிநடத்த வேண்டும்.



வீடுகளிலே ஒரு பொருட்களை வாங்கும் போது அல்லது ஒரு சொத்தை கொள்வனவு செய்யும் போது இது எப்படி வாங்கப்படுகிறது? இதை வாங்குவதற்கு எங்கே இருந்து பணம் கிடைக்கிறது? என்ன வழிகளை கையாளுகிறார்கள்? போன்ற வினாக்களை நாம் எழுப்பி சரியான வழியிலா இது கிடைக்கிறது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.



இன்றும் சிலர் தவறான வழிகளை கையாண்டு வாகனங்களையும், காணிகளையும், பொருட்களையும், நகைகளையும் வாங்குவதை நாம் சில நேரம் கண்டு கொள்ளுகிறோம்; நாம் கண்டும் காணாதவர்கள் போலவும் இருக்கின்றோம். நாமும் தவறு செய்யாது மற்றவர்களையும் தவறு செய்யாத ஒரு படி உணர்த்தி சரியான வழியில் நடத்த நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.





1 இராஜாக்கள் 21: 20 அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.



கர்த்தருடைய தீர்க்கதரிசியான எலியாவை ஓர் பகைஞனாகவே ஆகாப் ராஜா பார்க்கிறார். எலியா எல்லா தீர்க்கதரிசிகளையும் விட கொஞ்சம் வித்தியாசமானவராகவே இருந்தார் ; இப்படிப்பட்ட ஒரு தேவ மனிதனோடு நட்புறவை பேணிக்கொள்வது எவ்வளவு ஆசீர்வாதமாக இருந்திருக்கும், ஆனால் ஆகாப் ராஜாவோ எலியாவை ஒரு எதிரியாகவே பார்க்கின்றார்.



எதிரிகளை நாம் எதிரிகளை போலவும் நண்பர்களை நண்பர்களைப் போலவும் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். தேவனுடைய மனிதர்களை ஒருபோதும் நாம் எதிரிகளாக பார்க்க கூடாது. அவர்கள் தேவனுடைய வழிகளை நமக்கு உணர்த்துபவர்கள். நம்முடைய பிழைகளை நமக்கு அறிய தருகிறவர்கள். நாம் சரியான வழியில் நடப்பதற்கு நமக்கு உறுதுணையாக இருப்பவர்கள்.



நல்ல தேவனுடைய பரிசுத்தவான்களை நாம் எதிரிகளாக பார்ப்பது தேவனை எதிரியாக பார்ப்பதற்கு ஒப்பானதாகும். நமக்கு இன்றைய நாளிலே சாத்தான் மாத்திரமே எதிரி மனிதர்களில் யாரும் நமக்கு சத்துருக்கள் கிடையாது. ஆனால் சாத்தானால் பயன்படுத்தப்படும் மனிதர்களை குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும் நாம் யாருடன் கைகோர்க்கிறோம் என்பதை குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.



நேசிக்க வேண்டிய மனிதர்களை நாம் நேசிக்க வேண்டியது மிகவும் நமக்கு அவசியமான ஒன்றாகும். அதே நேரம் பகைக்க வேண்டிய காரியங்களை நாம் பகைக்க தான் வேண்டும். தேவ மனிதர்களுடன் நாம் நன்றாக உறவை பேணுவோம். அவர்களுடைய அறிவுரைகளுக்கு செவி சாய்ப்போம். அவர்களுடைய வார்த்தைகளை கனம் பண்ணுவோம்.



கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.!! ஆமென்.!!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *