நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக.
நம்முடைய ஆண்டவராகிய தேவன் விரும்புகிற ஓர் அருமையான சுபாவங்களில் ஒன்று சாந்த குணம். வேதாகமத்தில் பல இடங்களில் இந்த சாந்தகுணத்தின் அருமையான ஆசீர்வாதங்களை நாம் வாசிக்க முடியும்.
சங்கீதம் 147 :6 கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரை மட்டும் தாழ்த்துகிறார். மத்தேயு 5:5 சாந்த குணம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள். இந்த வசனங்களினூடாக நாம் சாந்த குணம் எவ்வளவு மேன்மை உள்ளது என்றும் அது எத்தனை பெரிய ஆசீர்வாதங்களை ஒரு மனிதனுக்கு கொண்டு வருகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
பரிசுத்த வேதாகமத்தில் ஒரு சில மனிதர்கள் தம்மிடையே சாந்த குணத்தை கொண்டிருந்தனர் என்பதாக நாம் வாசித்து அறிந்து கொள்ளலாம். ஒரு சில சம்பவங்களின் போது தான் அவர்கள் பெயர்களுக்கு முன்பதாக அவர்களை சாந்த குணம் உள்ள மனிதர்கள் என வேதாகமம் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஆகவே சாந்த குணம் உள்ள மனிதர்கள் தம்முடைய வாழ்க்கையில் எவ்விதம் நடந்து கொள்வார்கள் என்பதை நாம் இன்று ஆராய்ந்து பார்ப்போம்.
மோசே
எண்ணாகமம் 12:3 மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.
இங்கே தன்னுடைய சொந்த சகோதரர்கள் மூலமாக மோசே ஒரு பெரிய எதிர்ப்பை எதிர்கொள்கிறார். ஆரோன் மிரியாம் போன்ற அவருடைய சொந்த சகோதரர்கள் தேவையற்ற பிரச்சனையை இப்பொழுது எழுப்புகின்றனர். மோசே திருமணம் செய்த ஸ்திரீயை குறித்து பிரச்சனை எழும்புகிறது. ஆனால் இந்த பிரச்சனையின் போது அவர்கள் கூறின இன்னும் ஒரு காரியம் மோசேயை கொண்டு மாத்திரமா கர்த்தர் பேசுகிறார்? எங்களைக் கொண்டும் அவர் பேசியதில்லையோ என்று கேட்டார்கள்.
ஏதோ ஓர் பிரச்சினையை பேச வந்து இப்பொழுது வேறு ஏதோ காரியத்தை குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் இவர்களுக்கு தக்க பதிலடி மோசே வழங்கி இருக்க முடியும் அல்லது இவர்களை பழிவாங்கும் வண்ணமாக மோசே ஏதோ ஒரு காரியத்தை செய்திருக்க முடியும் ஆனால் வசனம் சொல்லுகிறது அவன் சாந்த குணம் உள்ளவனாய் இருந்தான் என்பதாக .
அதாவது இந்த இடத்திலே மிகுந்த அமைதியாக, பொறுமையாக இருக்கின்றார். அவர் எதிர்த்து நின்று அவர்களை வாதாட அழைத்து இருக்க முடியும் அல்லது அவர்களுடைய குற்றங்களை அவர்களுக்கு சொல்லி இருக்க முடியும். ஆனால் எதுவும் பேசாமல் மிகவும் அமைதியாக இருக்கின்றார். பதில் வழங்கக்கூடிய சூழ்நிலைகள் இருந்தும் பதில் வழங்காமல் அமைதியாக இருந்ததே மோசே சாந்தகுணத்தை கொண்டு இருந்தார் என்பதற்கான அடையாளமாகும்.
பதில் வைக்கத்தக்க, பதிலுக்கு பதில் வழங்கத்தக்க சூழ்நிலைகள் இருந்தாலும் நாம் அமைதியாக இருப்போம் என்று சொன்னால் அதுவே நாம் சாந்த குணம் உள்ளவர் என்பதை எடுத்துக் காண்பிக்கின்றது. நமக்கு விரோதமாகவும் நமக்கு எதிராகவும் மக்கள் காரியங்களை செய்வார்கள் ஒருவேளை நம்முடைய சொந்த சகோதரர்கள் நமக்கு விரோதமாக எழும்பலாம் அல்லது நம்முடைய திருச்சபையிலே இருக்கின்றதான சகோதரர்கள் நமக்கு விரோதமாக எழும்பி நாம் செய்யாத குற்றங்களை சொல்லி நம்மை புண்படுத்தும் விதமாகவும் நம்மை காயப்படுத்தம் விதமாகவும் நமக்கு பிரச்சனைகளை கொண்டு வரும் வண்ணமாகவும் செயல்படலாம்.
ஆனால் இப்படிப்பட்ட நேரங்களில் நாம் அவர்களுக்கு தக்க பதிலடியை வழங்க கூடிய தைரியம் நமக்கு இருந்தாலும், பதிலுக்கு பதில் செய்யக்கூடிய சூழல் நமக்கு இருந்தாலும் நாம் அமைதியையும் பொறுமையையும் காண்பிப்போம் என்று சொன்னால் அதுவே நாம் சாந்த குணம் உள்ளவர்கள் என்பதற்கான அடையாளமாகும்.
அநீதியாய் நாம் நடத்தப்படும் போதும், அபாண்டமான பழியை நம்மில் சுமத்தும் போதும், நாம் செய்யாத குற்றங்களை நம்மீது சுமத்தும் போதும் நாம் மிகுந்த அமைதி உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். இதற்கான பதிலை ஆண்டவர் வழங்குவதற்கு நாம் அமைதியாக கர்த்தரை சார்ந்து கொள்ள வேண்டும்.
இந்த சம்பவத்திலும் நாம் பார்க்கின்றோம், மோசே அமைதியாக இருக்கின்றார். ஆண்டவர் இவர்களை அழைக்கின்றார் ; ஆண்டவர் இவர்கள் மேல் கோபம் கொள்ளுகின்றார். இறுதியில் மிரியாம் மீது மிகுந்த கோபம் கொண்டு தண்டனையை வழங்குவதை நாம் பார்க்கின்றோம். கர்த்தர் செயல்பட நாம் இடம் கொடுக்க வேண்டும். சாந்த குணம் உள்ள மனிதர்கள் கர்த்தரை சார்ந்து கொண்டு கர்த்தர் செயற்பட இடமளிப்பார்கள்.
செராயா
எரேமியா 51:60 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா ராஜ்யபாரம்பண்ணும் நாலாம் வருஷத்திலே பாபிலோனுக்குப் போன சமயத்தில் அவனோடே கூடப்போன மசெயாவின் மகனாகிய நேரியாவின் குமாரனும் சாந்தகுணமுள்ள பிரபுவுமாகிய செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி கற்பித்த வார்த்தை.
இங்கே செராயா என்கின்ற தான பிரபு ஒருவர் சாந்த குணம் உள்ளவராக சித்தரிக்கப்பட்டு இருக்கின்றார். இவருக்கு எரேமியா தேவனுடைய வார்த்தையை கற்பித்தார் என கூறப்பட்டிருக்கிறது. உண்மையில் தேவனுடைய வார்த்தையை ஒரு மனிதன் கற்றுக் கொள்வதற்கு அவன் சாந்தகுணம் உள்ளவனாக இருக்க வேண்டும்.
சாந்தகுணம் அற்ற மனிதர்கள் தேவனுடைய வார்த்தையை கற்றுக் கொள்ள முடியாது. நாம் வார்த்தையை கற்றுக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். அனுதினமும் நாம் தேவனுடைய வார்த்தையை கற்பவர்களாக இருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை மற்ற எல்லா காரியங்களிலும் பார்க்க நமக்கு முக்கியமானதாக தெரிய வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் வார்த்தையை கற்றுக் கொள்வது மிகவும் அவசியம். அதாவது வார்த்தையை உட்கொள்ளுவது மிகவும் அவசியம். இஸ்ரவேலர் மன்னாவை ஒவ்வொரு நாள் காலையிலும் சேகரிக்க வேண்டும். அதுவே அவர்களுடைய உணவு. அதனை அவர்கள் தவிர்க்க முடியாது அப்படி தவிர்த்தாலும் அவர்களால் உயிர் வாழ முடியாது.
ஆவிக்குரிய இஸ்ரவேலர் ஆகிய நமக்கும் இன்று மன்னா தேவனுடைய வார்த்தையே. இந்த வார்த்தையை நாம் தவிர்க்க முடியாது. இதை எப்போதும் உட்கொள்கிறவர்களாக நாம் இருக்க வேண்டும். இதை செய்வதற்கு நாம் சாந்த குணம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். கற்றுக் கொள்கிற மனப்பான்மை எப்பொழுதும் நமக்கு இருக்க வேண்டும்.
எரேமியா இன்னும் பல மனிதர்களை சந்தித்தார். ஆனால் அவர்கள் அந்த நாட்களில் பெருமையும் அகங்காரமும் ஆணவமும் செருக்கும் உள்ளவர்களாய் இருந்தபடியினால் அவர்களால் எரேமியாவின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்க முடியவில்லை. ஆனால் செராயா என்கின்ற தான் பிரபு சாந்த குணம் உள்ளவனாய் இருந்தபடியினால் எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகளுக்கு உண்மையாகவே செவி சாய்க்கிறான். அதாவது கற்றுக் கொள்கிறான்.
இயேசு
மத்தேயு 21:4 இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,
இங்கே இயேசு கிறிஸ்துவை குறித்து பேசப்படுகிறது. அவர் சாந்த குணம் உள்ளவராய் கழுதையின் மேலும் கழுதை குட்டி ஆகிய மறியின் மேலும் ஏறி வருகிறார் என்கின்றதான ஓர் செய்தி குறிப்பிடப்படுகிறது. அதாவது கழுதையின் மேல் ஏறி வருகிறதான ஒரு செய்தியின் போது இயேசுவின் சாந்த குணம் குறிப்பிடப்படுகிறது.
இது ஒரு தாழ்மையின் வெளிப்பாடாகும். அதாவது தாழ்மையுள்ள ஒரு மனிதனே இவ்வாறு செயல்பட முடியும் என்பதை இந்த வார்த்தை எடுத்துக் காண்பிக்கிறது. ஒரு ராஜா பெரும்பாலும் ரதங்களின் மேலும் குதிரைகள் மேலும் செல்வதையே விரும்புவான். உலகில் காணப்படும் மிகப் பெறுமதியான ஓர் வாகனத்தின் மீது செல்லவே அனைவரும் விரும்புவர்.
பெருமை கொண்ட ஒரு மனிதன் அதாவது அகங்காரமும் செருக்குடனும் நடக்கும் ஒரு மனிதன் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு வாகனத்தில் செல்வதற்கு விரும்ப மாட்டான். ஆனால் நம்முடைய ஆண்டவர் பரலோக ராஜ்யத்தில் இருந்து இறங்கி வந்து மனித அவதாரம் எடுத்து தன்னைத்தான் தாழ்த்தி, வெறுமையாக்கி மிகுந்த சாந்த குணம் உள்ளவராய் நடந்து கொண்டார்.
இன்று நாம் பல நேரங்களிலே உலகில் உள்ள மிகவும் பெறுமதியான ஒன்றை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அது வாகனமாக இருந்தாலும் சரி வீடாக இருந்தாலும் சரி சொத்துக்களாக இருந்தாலும் சரி நமது ஆடைகளாக இருந்தாலும் சரி ஏன் ஒரு உணவாக இருந்தாலும் சரி மிக பெறுமதியான ஒன்றை வைத்துக் கொள்ளவே விரும்புவோம். அது ஒரு பெருமையின் வெளிப்பாடு என்பதை நாம் மறந்து போகக்கூடாது.
நாம் சாந்த குணம் உள்ளவர்களாய் நடந்தால் மாத்திரமே தாழ்மையுடன் நடக்க முடியும். தாழ்மை உள்ளவர்களுக்கு தேவன் கிருபை அளிக்கிறார். சாந்தகுணம் உள்ளவர்களை தேவன் உயர்த்துகிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை போல நாமும் நம்முடைய வாழ்வில் சாந்த குணத்தை கொண்டிருப்போம்.
பிலிப்பியர் 4:5 உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். எல்லா மனிதரும் அறிந்து கொள்ளும் வண்ணமாக நம்முடைய சாந்த குணத்தை நாம் வெளிப்படுத்துவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.!!
Recent Bible message
- எம்மில் சாந்தகுணம் இருக்கிறதா? மூன்று வழிகளில் அறியலாம் | Tamil Bible Latest Message| Great Light Church
- தவிர்த்து கொள்ள வேண்டிய ஐந்து சுபாவங்கள் | ஆகாப் ராஜாவின் சரிதை | Tamil Bible Latest Message| Bible Sermon
- நமது ஆலயத்தை கட்ட முடியாத படி ஏற்படும் ஐந்து தடைகள் | Tamil Bible Latest Message| Bible Sermon
- தேவனின் ஐந்து முயற்சிகளும் தோற்றுப் போன வரலாறும் படிப்பினைகளும் / Tamil Bible Message/ Bible sermon/ latest bible message
- உயர்வுக்கு ஆண்டவர் எதிர்பார்க்கும் மூன்று தகுதிகள்// Tamil Bible Message// Tamil Christian Bible study notes // bible sermon
categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
Latest Post
- எம்மில் சாந்தகுணம் இருக்கிறதா? மூன்று வழிகளில் அறியலாம் | Tamil Bible Latest Message| Great Light Church
- Double Quiz – 586 | Twin Quiz | Tamil Bible Quiz| Bible Quiz competition| Quiz for adults
- Three Signs of Meekness| The power of Gentleness in the Bible| English Bible latest message
- Riddles – 1006 | Bible Riddle Quiz | Tamil Bible Quiz with answers for youth| விடுகதை
- Double Quiz – 585 | Tamil Bible with Answers for youth | தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 584 | Tamil Bible Quiz| Daily quiz| Twin Quiz | இரட்டை கேள்வி| quiz for youth
- குறுக்கெழுத்து போட்டி -9 | Crossword| Tamil Bible Crossword| bible Quiz with answers for youth
- Double Quiz – 583 | Tamil Bible Quiz| Bible Quiz with answers for youth| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 582 | Daily quiz| Twin quiz| இரட்டை கேள்வி| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 581 | Bible Quiz| Tamil Bible Quiz question and Answer for adults

